18 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி; ககன்யான் திட்டத்துக்கு ஆஸி., ஆதரவு: பிரதமர் மோடி, அல்பானிஸ் உடன்பாடு

மெல்பர்ன்: இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஒப்புக் கொண்டுள்ள ஆஸ்திரேலியா, இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தங்களில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் கையெழுத்திட்டு உள்ளன. பிரதமர் மோடி 3 நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி இந்தோனேசியா பயணத்தை முடித்து கொண்டு, நேற்று முன்தினம் ஆஸ்திரேலியா சென்றடைந்தார். அங்கு மெல்பர்ன் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3வது வருடாந்திர உச்சி மாநாடு மெல்பர்ன் நகரில் உள்ள அரசு மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் மற்றும் உயரதிகாரிகளை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையே 18 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதன் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் துடிப்புமிக்க ஜனநாயக நாடுகள். குறிப்பாக கடல்சார் வல்லரசு நாடுகள். இந்தோ பசிபிக் பகுதி என்பது இரண்டு பெருங்கடல்கள் சந்திக்கும் ஒரு புள்ளி மட்டுமல்ல, அது இந்தியா ஆஸ்திரேலியா போன்ற ஒருமித்த எண்ணம் கொண்ட ஜனநாயக நாடுகளின் பகிரப்பட்ட விருப்பங்களை வௌிப்படுத்த கூடியது. இரு நாடுகளும் உறவு, ஆழ்ந்த பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு விரிவான சகாப்தத்துக்குள் நுழைந்துள்ளன.

2022ம் ஆண்டின் பொருளதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் வெற்றியை தொடர்ந்து, இரு நாடுகளும் இரு தரப்பு முதலீட்டு ஒப்பந்தத்துடன், சமச்சீரான, லட்சியம் மிக்க, பரஸ்பர நன்மை பயக்கும் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை விரைவுப்படுத்த உறுதிப்பூண்டுள்ளன. அதன்படி 2015ல் எட்டப்பட்ட ஆஸ்திரேலியா, இந்தியா அணுசக்தி ஒத்துழைப்பு உடன்படிக்கையின்கீழ், அமைதி நோக்கங்களுக்கான ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இது ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு யுரேனியம் விநியோகம் செய்வதற்கான வழியை திறப்பதுடன், எங்களின் தூய்மையான எரிசக்தி இலக்குகளுக்கு புதிய உத்வேகத்தையும் அளிக்கும். முக்கிய கனிமங்களுக்கான வழித்தடனம் ஒன்றை உருவாக்குவதிலும் இரு தரப்பும் இணைந்து செயல்படும். அத்துடன், இந்தியா, ஆஸ்திரேலியா பாதுகாப்பு புத்தாக்க வழித்தடனம் மூலம், பாதுகாப்பு துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும், தொழில்துறையினரையும் இணைக்க இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவோம்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் கூறுகையில், “ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான கூட்டாளிகளில் இந்தியாவும் ஒன்று. இரு நாடுகளிடையேயான உறவு முன்னெப்போதையும் விட தற்போது மிகவும் வலுவாக மாறி உள்ளது. இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க ககன்யான் விண்வௌி திட்டத்துக்கு ஆஸ்திரேலியா ஆதரவளிக்கும்” என்றார்.

* உலகளாவிய பிராண்டாக மேக் இன் இந்தியா மாறி உள்ளது – மோடி பெருமிதம்
மெல்பர்னில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடையே பேசிய பிரதமர் மோடி, “இந்த நிலத்தின் பாரம்பரிய உரிமையாளர்களை அங்கீகரிப்பதன் மூலம் அவர்களின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் வருங்கால தலைவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். கடந்த 12 ஆண்டுகளில் நான் இங்கு வருவது இது 3வது முறையாகும். இந்தியா, ஆஸ்திரேலியா உறவு மிகப்பெரிய உயரத்தை எட்டி உள்ளது.

மெல்பர்ன், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்தியத்தன்மை நிறைந்த இடங்களும் உள்ளன. சிலர் இதனை லிட்டில் இந்தியா என்றும், ஒருசிலர் மினி இந்தியா என்றும் சொல்கிறார்கள். பெயர் எதுவானாலும், அவை இந்திய கலாச்சாரத்தின் சாராம்சத்தை கொண்டுள்ளன. உலகின் முதல் 3 பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்ற விருப்பம் தெரிவித்துள்ளோம். மேக் இன் இந்தியா உலகளாவிய பிராண்டாக மாறி உள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “பஹல்காம் தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிராக பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பயங்கரவாதிகள் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதல்கள் சர்வதேச அளவில் எதிரொலித்தன. இந்த நடவடிக்கை மூலம் இந்தியாவின் பாதுகாப்பு திறன் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் பூஜ்ய சகிப்புத்தன்மை உலகத்துக்கு நிரூபிக்கப்பட்டது” என குறிப்பிட்டார்.

* இந்தியா, ஆஸி., உறவுகளை கிரிக்கெட் போட்டியுடன் ஒப்பிட்டு பேசிய மோடி
மெல்பர்னில் இரு நாட்டு தொழில் துறையினர், அரசு அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியா, ஆஸ்திரேலியா நாடுகளின் பலமே நமது மக்களிடையேயான உறவுகள்தான். கிரிக்கெட்தான் இந்தியா, ஆஸ்திரேலியா ராஜதந்திர உறவுகளின் மொழியாக இருக்கிறது. நம் உறவின் நோக்கங்கள், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் போன்றவை.

நம் முடிவுகள் அனைத்தும் டி20 கிரிக்கெட் போட்டிகளை போலவே மிகவும் வேகமானவை. நமது கூட்டு செயல்பாடு, டெஸ்ட் போட்டிகளை போல ஆழமானது, நீளமானது. வரும் ஆண்டுகளில், இரு நாடுகளிலும் ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகள் போன்ற முக்கிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதன் மூலம் நமது விளையாட்டு ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும். விளையாட்டு உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதற்கான பல வாய்ப்புகளும் உருவாகும்” என்று தெரிவித்தார்.

* இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு மோடி அழைப்பு
ஆஸ்திரேலியா, இந்தியா தலைமை செயல் அதிகாரிகள் கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய மோடி, “இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்த பாதையின் மீது உலகளாவிய நம்பிக்கை இருப்பதற்கு இது மற்றொரு சான்றாகும். நமது துடிப்பான பொருளாதாரம் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு வழங்கும் மகத்தான வாய்ப்புகளையும் இது பிரதிபலிக்கிறது.

இந்தியாவின் வளர்ச்சி ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குகிறது. எனவே, ஆஸ்திரேலிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்” என அழைப்பு விடுத்தார். பின்னர் மெல்பர்னில் ஆளுநர் சாம் மோஸ்டினை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா, ஆஸ்திரேலியா இடையே விரிவான மூலோபாய கூட்டாண்மை, வர்த்தகம், முதலீடுகள், கல்வி மற்றும் விளையாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

* 2 ஆஸி. பல்கலைகள் இந்தியா வருகிறது
இந்தியாவில் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் வளாகங்களை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ​பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் விக்டோரியா பல்கலைக்கழகம் ஆகியவை முறையே பெங்களூரு மற்றும் குருகிராமில் தங்கள் வளாகங்களை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளவுள்ளன.

* புவனேஸ்வரில் உள்ள தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தில் சுரங்கத் தொழில் மற்றும் சுரங்க உபகரணங்கள், தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் சார்ந்த சிறப்பு மையத்தை அமைப்பதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

* 2028-29 ஆம் ஆண்டிற்கான இந்திய ராணுவப் பயிற்றுவிப்பாளர் ஒருவருக்கான அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய பாதுகாப்பு கல்லூரியில் ஒரு பயிற்றுவிப்பாளர் பணியமர்த்தப்படுவார்.

* ரூஃப்டாப் சோலார் பயிற்சி அகாடமி மூலம் சுமார் 2000 பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு சோலார் தொழில்நுட்ப வல்லுநர்கள், நிறுவுநர்கள் மற்றும் உதவியாளர்களாகப் பயிற்சி அளிக்கப்படும்.

* சினிமா மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்புக்காகவும், அத்துறையில் கூட்டுத் திட்டங்களுக்காகவும், கொல்கத்தாவில் உள்ள சத்யஜித் ரே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், ஆஸ்திரேலியாவின் தெற்கு பிரிஸ்பேனில் உள்ள கிரிபித் திரைப்படப் பள்ளிக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

Related Stories: