இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்யப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் அறிவிப்பு!!

ஆஸ்திரேலியா: இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்யப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோருக்கு இடையே மெல்போர்னில் நடைபெற்ற 3வது ஆண்டு கூட்டு உச்சிமாநாட்டில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதன் மூலம், இந்தியாவின் தூய்மையான எரிசக்தி இலக்குகளை எட்டும் நோக்கில், இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டின் இருதரப்பு அணுசக்தி ஒத்துழைப்பு உடன்படிக்கையின் கீழ், அமைதியான தேவைகளுக்காக மட்டுமே இந்த யுரேனியம் ஏற்றுமதி செய்யப்படும் என்று ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது. இரு நாடுகளும் இணைந்து பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் , இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான ‘பாதுகாப்பு வழித்தடம் ஆகியவற்றை உருவாக்க முடிவு செய்துள்ளன.

மேலும், இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ககன்யான்’ விண்வெளித் திட்டத்திற்கு ஆதரவாக, கோகோஸ் தீவுகளில் தற்காலிக விண்வெளி கண்காணிப்பு நிலையத்தை அமைக்கவும் ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டுள்ளது. இதை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது பிரதமர் மோடி பேசுகையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளும் துடிப்பான ஜனநாயக நாடுகள், பன்முக கலாச்சாரம் கொண்ட சமூகங்கள் மற்றும் முக்கியமான கடல்சார் வல்லரசுகள்.

இரு நாடுகளின் உலகளாவிய பார்வையும் ஒன்றாக இருப்பதால் பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் உறவு மேலும் வலுவடைகிறது. ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பானீஸ் கூறுகையில், ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான கூட்டாளிகளில் இந்தியாவும் ஒன்று என்றும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் வலுவாக மாறியுள்ளது என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

Related Stories: