ஈரோடு: ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (56). இவர், திருப்பூர் மாவட்டம் முத்தூர், வெள்ளகோயில், தாராபுரம் பகுதிகளில் 4 தனியார் சிபிஎஸ்இ (விவேகானந்தா) பள்ளிகள், 2 கல்லூரிகளுக்கு பங்குதாரராகவும், தாளாளராகவும் இருந்து வந்தார். 2 மாதங்களுக்கு முன் காங்கயத்தில் உள்ள ஒரு பள்ளியை வாங்கி நிர்வகித்து வந்தார்.
இதனால், அதிக வேலை பளு காரணமாக மன அழுத்தத்துடன் இருந்துள்ளார். இதற்காக, சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சக்திவேல் நேற்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறி புறப்பட்டவர், ஈரோடு ரயில் நிலைய 2வது பிளாட்பார்மில் அமர்ந்திருந்தார். அப்போது மன அழுத்தம் காரணமாக விரக்தி அடைந்து வாட்ஸ் அப்பில் ‘நான் ஈரோடு ரயில் நிலையத்தில் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என ஆங்கிலத்தில் அவரது மனைவியின் சகோதரர் குணசேகரனுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து அவர், அங்கு நின்றிருந்த சரக்கு ரயிலின் இரு பெட்டிகளுக்கு இடையே படுத்துள்ளார். அப்போது ரயில் புறப்பட்டதில் தலை, உடல் துண்டாகி உயிரிழந்தார். ரயில் நகர்ந்ததும் தண்டவாளத்தில் சக்திவேல் இறந்து கிடந்தது தெரிந்தது. இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, சக்திவேல் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
