லாட்டரி, கஞ்சா விற்றவர், பெண்களை மானபங்கம் செய்தவர் சொல்வது எல்லாம் பொய் தவெக எம்எல்ஏ புகாருக்கு திமுக, அதிமுக பதிலடி

* வியாபாரிகளிடம் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டுகிறார்

நெல்லை: முதல்வர் ஜோசப் விஜய் குறித்த சர்ச்சை பேச்சால் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதான நிலையில், நிபந்தனை ஜாமீனில் கடந்த 5ம் தேதி முதல் ஆத்தூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். நேற்று 3வது நாளாக கையெழுத்து போட வந்த அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, லாரி ஏற்றி என்னை கொல்ல பார்த்தார்கள்.

எனது காரும் சேதமடைந்தது என ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் குற்றம்சாட்டி உள்ளாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு, மண் லோடுடன் செல்லும் லாரியை மடக்கி ரூ.300 கேட்டிருக்கலாம். அதனால் லாரிக்காரன் கோபத்தில் வந்துருப்பான் என பதில் கூறினார். உங்களது ஆதரவாளர்கள், சரவணன் எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாகவும், ரூ.50 கோடி தருவதாகவும் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, எனக்கு ரூ.50 கோடி வாங்கித் தாருங்கள். வாங்கித் தர முடியுமா என நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார்.

சரவணன் கூறும் தகவல் முற்றிலும் தவறானது. அதாவது நான், லாட்டரி வியாபாரம் பண்ணல. கஞ்சா விற்கவில்லை. பெண்களை ஏமாற்றி மானபங்கம் செய்யவில்லை. இந்த தப்பை செய்தவர் சொல்வதெல்லாம் தவறானது, என்றார். உங்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு சொல்லிக்கொண்டு இருக்கிறாரே என்ற கேள்விக்கு, யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். பழுத்த மரம் கல்லடி படத்தான் செய்யும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார். இதேபோல், தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அளித்த பேட்டி: ஏரல் வாரச்சந்தை, 70 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இந்த சந்தையால் எந்தவித பிரச்னையும் கிடையாது. இந்த சந்தை பஞ்சாயத்து சார்பில் ஏலம் விடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. சில சமயங்களில் ஏலம் 3 வருடத்திற்கு நீடிக்கப்படும். அது நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் தவெக எம்எல்ஏ சரவணன் வந்த உடனே ஏலம் எடுத்தவர்களை கூப்பிட்டு எனக்கு பங்குதர வேண்டும். எனக்கு ஒரு வாரத்திற்கு ரூ.1 லட்சம் தர வேண்டுமென கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஏலம் எடுத்தவர்கள் எங்களால் பணம் தர முடியாது என்று சொல்லி உள்ளனர். நாங்களே கஷ்டப்பட்டு பணத்தை சந்தையில் போட்டிருக்கோம்.

பஞ்சாயத்துக்கு முழு பணத்தையும் கொடுத்துட்டுதான் கொஞ்சம், கொஞ்சமாக பிரித்து வருகிறோம். இந்த சூழ்நிலையில் ஒரு லட்சம், 2 லட்சம் என கேட்டால் எங்களால் எப்படி கொடுக்க முடியும் என கூறியுள்ளனர். இதை கொடுக்க முடியாது என சொன்னவுடனே இவர் ஆய்வு என்ற பெயரில் சந்தையில் வந்து ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரிய பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

உடனே இவர்களது அடியாட்கள் போய் பேரூராட்சி செயல் அலுவலரை ரூமுக்குள்ளே வைத்து சந்தையை மூட கையெழுத்து போடுமாறு மிரட்டியுள்ளனர். ஆளுங்கட்சி என்பதால் இஓ என்னை மிரட்டினார் என சொல்லமாட்டார். இதையடுத்தே பேரூராட்சி சார்பில் சந்தை நிறுத்தப்பட்டுள்ளது. இவருக்கு பணம் கிடைக்காததால் சந்தையை நிறுத்தி உள்ளனர். சந்தை கிடையாது என போர்டு வைச்சதினாலே எங்களுக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து கோரிக்கை வருது.

இதுவரை எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினராலும் இப்பகுதியில் இதுபோல் நடந்ததில்லை. சந்தையை திறக்க விடலேன்னா நாமே திறப்போம்ன்னு பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து திரண்டதாலேயே இவர் முன்கூட்டி போய் நான் அப்படி சொல்லவே இல்லை. நீங்கள் எல்லோரும் எப்பொழுதும் போல் கடை போடுங்கள் என  சொல்லியுள்ளார். 100% கடை வருகிற இடத்தில் 20% கடை திறந்திருக்காங்க. இது யாரால இந்த எம்எல்ஏவால்.

சட்டமன்றத்திலே நாங்கள் லஞ்சம் இல்லாத ஆட்சி தருவோம்னு முதலமைச்சர் சொல்றாரு. ஆனால் இங்கே என்ன நடக்குது? லஞ்சத்திற்கு ஏரல் ஒன்றே சாட்சி. இதுக்குமேல அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமைக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இனியாவது இவர்கள் திருந்திக் கொள்ள வேண்டும். தவறு எங்கு நடக்கிறதோ அங்கு எல்லாம் இனி எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து மாபெரும் போராட்டங்களை நடத்துவோம், என்றார்.

* எம்எல்ஏ மறுப்பு
சரவணன் எம்எல்ஏ கூறுகையில், நான் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்து எம்எல்ஏ ஆகியுள்ளேன். நான் ஏரல் வாரச்சந்தையில் ஆய்வு செய்தபோது குத்தகைதாரர்கள் ரசீது ஏதும் கொடுக்காமல் அதிகளவு பணம் வசூல் செய்து வருவதை கண்டுபிடித்தேன். அதை குறைத்து வாங்கினாலே பொதுமக்களுக்கு பொருட்கள் குறைந்த விலையில் சந்தையில் கிடைக்குமே என்ற நல்ல எண்ணத்தில் தான் பேரூராட்சி நிர்வாகத்திடம் கூறினேன்.

இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என நினைத்தேன். ஆனால் அதிமுகவினர் தவறாக சித்தரித்து நான் லஞ்சம் கேட்டதாக உண்மைக்கு மாறான தகவல்களை கூறிவருகிறார்கள் என்றார். இந்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி எம்எல்ஏ சரவணனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: