ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தகவல்

சென்னை: பத்திரப்பதிவுகளை இனிமேல் ஆன்லைன் மூலம் பதிவு செய்துகொள்ளலாம் என்று அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தார். தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் நேற்று சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2026ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர், தனித்துணை ஆட்சியர் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோரின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு நிருபர்களுக்கு அவர் அளித்தபேட்டி: ஆகஸ்ட் 17ம் தேதி முதல் ‘எனிவேர் ரிஜிஸ்டிரேஷன்’ திட்டம் மூலம் ஆன்லைன் முறையிலேயே அனைத்து பதிவுகளையும் மேற்கொள்ள முடியும். முதல்முறை நிலம், அபார்ட்மென்ட்டில் வீடு வாங்குவதை முழுவதும் ஆன்லைன் மயமாக்க உள்ளோம். இத்திட்டத்தின் மூலம் கட்டுமான நிறுவனங்களுக்கு தனி login ஐடி வழங்கப்படும். அவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் முதல்முறை நிலம், வீடு வாங்குவோருக்கான வீடு மனைகளை பதிவு செய்து கொடுக்கலாம்.

விரல் ரேகை பதிவு உள்ளிட்ட கருவிகளை மட்டும் அவர்கள் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் ஒரே நாளில் ஆவணங்களை பதிவேற்றி , பதிவிறக்கம் செய்ய முடியும். இந்த ஆன்லைன் முறையால் 30 சதவீத மக்கள் பதிவுத்துறை அலுவலகம் வருவது குறையும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் வணிகவரித்துறை செயலர் குமரகுருபரன், பத்திரப் பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: