மதுரை: விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த சமுத்திரவள்ளி, வேலுத்தாய் ஆகியோரது கணவர்கள், சிவகாசி எட்டக்காபட்டி பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் உயிரிழந்தனர். இதற்காக தங்களுக்கு உரிய இழப்பீடு கோரி இருவரும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பட்டாசு ஆலைகளில் உரிமம், பாதுகாப்பு அலுவலர் நியமனம், தொடர் ஆய்வு, பாதுகாப்பு பயிற்சி உட்பட வெடி பொருள் சட்டம், தொழிற்சாலை சட்டம் உள்ளிட்ட சட்ட விதிகள் தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை வழங்கியிருந்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர், விருதுநகர் மாவட்டத்தில் அடிக்கடி நிகழும் பட்டாசு விபத்துக்களை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என ஆய்வு செய்ய, மாவட்ட இலவச சட்ட உதவி மைய தலைவர் தலைமையில் தொடர்புடைய அனைத்து துறை உயரதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இக்குழு கூடி விவாதித்து தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
