மாநகர் முழுவதும் புதர்மண்டிய ஓடைகள் தூர்வாரப்படுமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஈரோடு : மழைக்காலம் தொடங்கி உள்ளதால், ஈரோட்டில் புதர்மண்டி காணப்படும் ஓடைகள் தூர்வாரும் பணி தொடங்குமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.ஈரோடு மாநகராட்சியில் எந்த பக்கம் பார்த்தாலும் நீர்நிலைகள் தென்படும் அளவுக்கு அனைத்து பகுதிகளிலும் ஓடைகள் உள்ளன.

பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை ஆகிய 2 பெரிய ஓடைகளும், இந்த ஓடைகளின் துணை ஓடைகளும் உள்ளன. நரிப்பள்ளம், சுண்ணாம்பு, கொல்லம்பாளையம், காசிபாளையம், ரங்கம்பாளையம், சத்யாநகர், செங்கோடம்பள்ளம் ஓடைகள் என பல ஓடைகள் உள்ளன.

இதில், பெரும்பாலான ஓடைகள் கீழ்பவானி பாசன கசிவுநீர் ஓடைகளாகும். மழைக்காலங்களில் இந்த ஓடைகளில் தண்ணீர் நிரம்பி ஓடும். இந்த ஓடைகள் அனைத்தும் ஒரு காலத்தில் நன்னீர் ஓடிய ஓடைகளாகும். இப்போதும் இந்த ஓடைகள் தொடங்கும் இடங்களில் இருந்து நன்னீராகவே தண்ணீர் பாய்ந்து வருகிறது.

ஈரோடு மாநகரை தொட்டு ஓடும் போது ஆலைக்கழிவுகள், குடியிருப்பு கழிவுகள் என அனைத்தும் கலந்து சாக்கடையாக மாறி விடுகிறது. இந்த ஓடைகளை மீண்டும் தூய்மைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஏற்கனவே, பெரும்பள்ளம் ஓடையை தூய்மைப்படுத்தும் வகையில் ஓடைகள் முழுவதும் தூர் வாரப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரும்பள்ளம் ஓடையை மையமாக கொண்டு வளர்ச்சித்திட்ட பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் முழுமை அடையவில்லை. குறிப்பாக, பெரும்பள்ளம் ஓடையின் கிளை ஓடைகளான காசிபாளையம் ஓடை, ரங்கம்பாளையம் ஓடை உள்ளிட்டவற்றில் எந்த ஒரு பணியும் செய்யப்படவில்லை.

இந்தநிலையில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து ஓடைகளும் புதர்மண்டி உள்ளன. ஆங்காங்கே சாக்கடை தேங்கி அனைத்து பகுதிகளிலும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.

இதேபோல் ஈரோடு மாநகராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட எல்லப்பாளையம் பகுதியில் ஓடை செல்கிறது. நசியனூர், ஆட்டையாம்பாளையம் வழியாக வரும் இந்த ஓடை தண்ணீர் கருவில்பாறை வலசு குளத்தில் கலக்கிறது.

தற்போது, இந்த ஓடையில் காடுபோன்று செடி, கொடிகள், மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக, ஓடை வழியாக தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. ஈரோட்டில் பெரிய அளவில் மழை பெய்தால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாதிப்பு ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

எனவே தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் புதர்மண்டி காணப்படும் ஓடைகள் தூர்வாரும் பணி தொடங்குமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Stories: