திருவனந்தபுரம்: பூட்டானிலிருந்து ஒரு கும்பல் சொகுசு கார்களை கடத்தி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வரி ஏய்ப்பு செய்து பதிவு செய்து விற்பனை செய்து வருவதாக கடந்த வருடம் சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விசாரணையில் பிரபல நடிகர்கள், தொழிலதிபர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் வாங்கி பயன்படுத்துவது தெரியவந்தது.
பிரபல மலையாள நடிகர்களான மம்மூட்டி, துல்கர் சல்மான், பிரித்திவிராஜ் உள்பட பலர் இந்த வாகனங்களை வாங்கியதாக சுங்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. சோதனையில் துல்கர் சல்மானிடமிருந்து டிபென்டர், நிசான் பட்ரோல், லேண்ட் க்ரூஸர் என 4 சொகுசு கார்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கொச்சியில் உள்ள அலுவலகத்தில் வைத்து சுமார் 9 மணிநேரம் இந்த விசாரணை நடைபெற்றது. அவரது வாக்குமூலத்தை சுங்கத்துறை அதிகாரிகள் நம்பவில்லை. அவரிடம் மேலும் பல கடத்தல் கார்கள் இருப்பதாகவும், அதை சென்னையில் சில படப்பிடிப்புத் தளங்கள் உள்பட சில பகுதிகளில் மறைத்து வைத்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் துல்கர் சல்மானிடம் சுங்கத்துறையினர் மீண்டும் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
