புதுடெல்லி: பாஜ செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறுகையில்,’உத்தரகாண்ட் மாநிலம் உதம்சிங் நகரில் உள்ள கிச்சா என்ற இடத்தில் நஸ் ரீன் கான்(90) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக உள்ள 4 ஏக்கர் நிலத்தை பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவின் சகோதரி சாய்ரா வதேரா அபகரிக்க முயற்சித்துள்ளார். சட்டரீதியாக அந்த நிலத்தை கைப்பற்ற முடியவில்லை என்பதால் மூதாட்டியை மிரட்டி வலுக்கட்டாயமாக நிலத்தை கைப்பற்ற முயற்சித்துள்ளார்.
அந்த தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திலக் ராஜ் பெஹர் நேற்று முன்தினம் 100 பேருடன் அங்கு சென்று நிலத்தை காலி செய்யவில்லை என்றால் கடும் விளைவுகள் ஏற்படும் என மூதாட்டியை மிரட்டி உள்ளார். இந்த நிலத்தை அபகரித்து சாய்ரா வதேராவிடம் ஒப்படைக்க காங்கிரஸ் கட்சியினர் முயற்சிக்கின்றனர் என்று எம்எல்ஏ திலக்ராஜ் மீது நஸ் ரீன் குற்றம் சாட்டி உள்ளார். பிரியங்கா காந்தி- வதேரா குடும்பத்தினர் உண்மையான அரசியல் செய்வது கிடையாது. ஆனால் அடுத்தவர் நிலத்தை ஆக்கிரமிப்பதே அவர்களுடைய தொழிலாகும்’ என்றார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பிரியங்கா தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
