அரசியலமைப்பு சட்டத்தை மீறி அரசுக்கு தொடர்பில்லாதவர்களை அரசு கூட்டத்தில் அனுமதித்த முதல்வர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி டிஜிபியிடம் புகார்

சென்னை: அரசியலமைப்பு சட்டத்தை மீறி அரசுக்கு தொடர்பில்லாதவர்களை அரசு கூட்டத்தில் அனுமதித்த முதல்வர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தை மீறி அரசுக்கு தொடர்பில்லாதவர்களை அரசு கூட்டத்தில் அனுமதித்த முதல்வர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறை தலைமை இயக்குநரிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று புகார் மனு அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முதலமைச்சராக பதவி ஏற்கும் பொழுது அரசின் ரகசியங்களை காப்பேன் என உறுதிமொழி ஏற்ற முதல்வர் விஜய் தற்போது தனியார் நபர்களை அரசு நிகழ்ச்சிகளில் அனுமதித்து அரசு ரகசியங்களை அவர்களிடம் தெரிவிப்பது ஏன்?. மக்களிடையே போதுமான பெரும்பான்மையை பெறாமல் மைனாரிட்டியோடு அமைக்கப்பட்டுள்ள விஜய் ஆட்சி தொடர்ந்து பல்வேறு தவறுகளை செய்து கொண்டிருக்கிறது.

குதிரை பேரம் நடத்தி வருகிறது தவெக அரசு, ஒரு கட்சியின் சார்பில் வெற்றி பெற்றுவிட்டு பதவிக்காக ஆளுங்கட்சிக்கு போவது இதுவே முதல்முறை, குதிரை பேரத்தில் தொடங்கிய இந்த விஜய் ஆட்சி பல்வேறு தவறுகளை செய்து கொண்டிருக்கிறது. விஜய்க்கு ஆட்சி செய்ய தெரியவில்லை என்றால் யாரிடமாவது டியூஷன் சென்று கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்காக அரசுக்கு தொடர்பில்லாத ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய தனியாரிடம் அரசின் நடவடிக்கைகளை மேற்கொள்ள விட்டுவிடுவது ஏற்புடையதல்ல.

தமிழர்களே அல்லாத இவர்கள் எந்த முறையில் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் அமைச்சரவை கூட்டத்திற்கும் அரசு சார்பில் நடத்துகிற அனைத்து கூட்டத்திலும் எப்படி கலந்து கொண்டிருக்கிறார்கள். விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் பொழுது ரகசிய காப்புரிமை எடுத்துக் கொள்கிறார். ஆனால் அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் இவர்களுக்கு தெரியப்படுத்துகிறார். குறிப்பாக முதல்வரின் அறைக்கு அருகிலேயே இவர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் இவர்கள் கலந்து கொள்கின்றார்கள். இவர்கள் அரசு கூட்டங்களில் பங்கேற்பது கண்டனத்திற்குரியது. அவர்கள் மீது மற்றும் அவர்களுக்கு அனுமதி அளித்த முதல்வர் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டி காவல்துறை தலைமை இயக்குநருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அவர் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தின் வாயிலாக இதற்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து நீதியை பெறுவோம். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

* எங்களுக்கு வைகோ ஒரு பொருட்டே கிடையாது
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் சென்றவர்கள் அரசியலில் அனாதையாக்கப்பட்டனர். எங்களுக்கு வைகோ ஒரு பொருட்டே கிடையாது. அரசியலில் அடிக்கடி வாக்குறுதிகளை மீறும் ஒருவர் தான் வைகோ. இந்த ஆட்சியை பற்றி மக்கள் அறிந்து வருகிறார்கள். நேரு, இந்திரா காந்தியை பார்த்தவர்கள் நாங்கள். நேற்று முளைத்த காளான் மாணிக்கம் தாக்கூர். திமுக போராட்டம் நடத்தினால் அர்த்தத்துடன் நடத்தும். அப்படி திமுக போராடினால் நிச்சயம் வெற்றி கிட்டும்.

Related Stories: