லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் விமலா சஸ்பெண்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் விமலாவை பணியிடை நீக்கம் செய்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ​சென்னை விபசார தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராஜலட்சுமி என்பவருக்கு எதிராக எழுந்த புகாரை விசாரித்த லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் விமலா அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை தயார் செய்யுமாறு விமலாவுக்கு லஞ்ச ஒழிப்பு துறை உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கையை தயார் செய்து லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை இயக்குநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு திருத்தங்களுக்குப் பின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.​ ​இந்த சூழ்நிலையில், வழக்கு பதிவு செய்ததற்காக விமலாவை பணி இடைநீக்கம் செய்து கடந்த ஜூன் 17ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து விமலா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா, இன்ஸ்பெக்டர் விமலாவுக்கு எதிரான பணியிடை நீக்க உத்தரவு முற்றிலும் உள்நோக்கம் கொண்டது என்று கூறி பணியிடை நீக்க உத்தரவுக்கு ஜூலை 9ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், விமலாவின் மனுவுக்கு பதிலளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், துணை இயக்குனருக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் விமலா பணியிடை நீக்கத்திற்கு இடைக்கால தடை விதித்த தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க கோரி தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் முறையீடு செய்தார். இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள், வழக்கு எண்ணிடப்பட்ட பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: