விஜய் பிறந்த நாளில் பள்ளி, கல்லூரிகளில் விதிமீறல் கல்வி நிறுவன பொறுப்பாளர்களை சஸ்பெண்ட் செய்ய கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலரும், வழக்கறிஞருமான கவி கணேசன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தவெக தலைவரின் பிறந்த நாளையொட்டி பள்ளிகளில், அந்த கட்சியினர் கட்சி கொடி, சின்னங்களுடன் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். மாணவர்களை தவெக தலைவருக்கு பிறந்த நாள் பாடல் பாடவும், கோஷம் எழுப்பவும் செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் தவெக தலைவரின் முகத்தின் வடிவில் 3000 மாணவர்களை வெயிலில் அமரச் செய்துள்ளனர்.

கல்வி நிறுவனங்களில் அரசியல், மத சித்தாந்தம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்வி கற்பிக்கவும், ஒழுக்கத்தை மேம்படுத்தவும், நற்பண்புகளை பயிற்றுவிக்கவும் தான் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, கல்வி நிறுவனங்களில், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்த அரசாணையை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் அரசியல் கொண்டாட்டங்கள் நடத்தியது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் தலைமை பதவி வகிப்பவர்கள், ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: