தர்மபுரி: தர்மபுரியில் கடன் தொல்லையால் மனைவி, மகளை கொலை செய்து விட்டு ஓடும் லாரியில் பாய்ந்து தொழிலதிபர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி கோட்டை கோயில் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சந்தோஷ் (45). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சரண்யா (35). இவர்களது மகள் சாத்விகா (14), தனியார் பள்ளி விடுதியில் தங்கி 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை சரண்யாவிற்கு, அவரது பெற்றோர் போன் செய்தபோது அவர் எடுக்கவில்லை.
இதையடுத்து, நேரில் வந்து பார்த்தபோது, சரண்யா மற்றும் சாத்விகா ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். அதிர்ச்சிக்குள்ளான அவர்கள், சந்தோஷை தேடினர். அவருக்கு போன் போட்டும் எடுக்கவில்லை. தகவலறிந்து வந்த தர்மபுரி டவுன் போலீசார் விசாரித்துக் கொண்டிருந்த நிலையில் தர்மபுரி அருகே புறவடை பகுதியில் லாரி முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், அது சந்தோஷ் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், திடுக்கிடும் தகவல் வெளியானது.
சந்தோஷ் ரியல் எஸ்டேட் தொழிலுடன் பங்குசந்தை மற்றும் ஆன்லைன் டிரேடிங்கும் செய்து வந்துள்ளார். இதில் அதிகளவில் கடன் ஏற்பட்டதால், கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் அடமானம் வைத்த நகைகளையும் மீட்க முடியவில்லை. கடன் சுமை மேலும் அதிகரித்ததால் தற்கொலை செய்ய முடிவு செய்தார். தான் போனபிறகு மனைவியும், மகளும் கடன் தொல்லையால் சிரமப்படக் கூடாது என நினைத்து இருவரையும் கொல்ல திட்டமிட்டுள்ளார்.
நேற்று காலை மனைவியை பாத்ரூம் அழைத்து சென்று, சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்துள்ளார். இதில் நிலைகுலைந்த சரண்யா நாக்கு வெளியே தள்ளியவாறு துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், 10.30 மணியளவில் மகள் படிக்கும் பள்ளிக்கு சென்று தாத்தா இறந்து விட்டதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீடு திரும்பிய சாத்விகா தாய் எங்கே என கேட்டுள்ளார். திடீரென அவர் சுத்தியலால் பலமாக மகளை தாக்கியுள்ளார். இதில், தலை சிதறி சாத்விகா சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
பின்னர் சந்தோஷ் லாரியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. தர்மபுரி எஸ்பி(பொ) மகேஸ்வரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சந்தோஷ், மனைவி, மகளை கொலை செய்ததற்கும், அவர் தற்கொலை செய்து கொண்டதற்கும் கடன் சுமை மட்டும் தான் காரணமா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* அம்மாவையும் கொல்ல நினைத்தேன்: 5 வீடியோக்கள் பதிவு செய்து வெளியீடு
சந்தோஷ் தற்கொலை செய்வதற்கு முன்பாக அடுத்தடுத்து 5 வீடியோக்கள் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், “நிறைய பேருக்கு நான் பணம் தர வேண்டும். ஏதோ வந்தா பார்த்துக்கங்க. ஒன்னும் பண்றதுக்கு இல்லை. முனிராஜ் ரியல் எஸ்டேட் செய்ய பணம் வாங்கி கொடுத்தார். அவரை யாரும் எதுவும் செய்யாதீங்க. என்னால முடியல.
விட்ருங்க. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் தான் என் பொண்டாட்டி, பிள்ளையை கொன்றேன். எங்க அம்மாவை கொலை செய்ய வேண்டும் என நினைத்தேன். அதற்குள் மாமனார் பேசி விட்டார். அதனால் விட்டுவிட்டேன். மனைவி அக்கவுண்டில் ரூ.42 லட்சம் உள்ளது. இந்த தொகையை எடுத்து கடன் கொடுக்க வேண்டியவர்களுக்கு பிரித்துக் கொடுங்கள் என்று பெயரைக் கூறி, அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
