குழந்தைகளை பாதுகாப்பதில் சட்டம் முதுகெலும்பாக செயல்படும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவரின் தூக்குத்தண்டனை உறுதி: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: குழந்தைகளை பாதுகாப்பதில் சட்டம் முதுகெலும்பாக செயல்படும் என கூறியுள்ள ஐகோர்ட் கிளை, 3 சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. நெல்லை, மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தசேகர் (41). இவர் கடந்த 2023ம் ஆண்டு 6, 7 மற்றும் 8 வயதுடைய மூன்று சிறுமிகளை மிரட்டி வீட்டிற்குள் அழைத்துச் சென்று ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்தார். இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன சிறுமிகள் வெளியே தெரிவிக்காமல் இருந்தனர். சிறுமிகளின் அன்றாட நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிந்ததையடுத்து, பெற்றோர் விசாரித்தனர். அப்போது தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை சிறுமிகள் தெரிவித்தனர். இதனையடுத்து பெற்றோர், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து ஆனந்தசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம், ஆனந்தசேகருக்கு தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் அரசு சார்பில் தலா ரூ.7 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில், தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்தக் கோரி, போலீசார் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் ஆனந்தசேகர் தரப்பிலும் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். தீர்ப்பில், ‘‘இந்த வழக்கைப் பொறுத்தவரை உடலுக்கு எதிராக மட்டுமல்ல, மூன்று ஆன்மாக்களுக்கு எதிராகவும் குற்றவாளி திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தியுள்ளார். கொலை செய்து விடுவதாக மிரட்டி, இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார். இதுபோன்ற குற்றத்திற்கு இரக்கம் காட்டுவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். குழந்தைகளின் உணர்வுகளை மலிவாகக் கருதி, குற்றவாளி சிறையில் மீதி காலத்தை கழிப்பதை இந்த நீதிமன்றம் விரும்பவில்லை.

குழந்தைகளை பாதுகாப்பதில் சட்டம் முதுகெலும்பாகவே செயல்படும். இந்த உத்தரவு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது நீதி வழங்கும் மற்றும் சமூகத்தின் ஒழுக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சி. இந்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. அதேநேரம், நீதிமன்ற பதிவாளர் உத்தரவு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலிருந்தும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளத்தை அகற்ற வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: