புதுடெல்லி: பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான கட்டணத்தை ஒன்றிய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. புதிய பாஸ்போர்ட் / புதுப்பிப்பதற்கான கட்டண விவரம்: 18 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 15 முதல் 18 வயது வரையிலான பிரிவினர் 36 பக்கங்களை கொண்ட புதிய பாஸ்போர்ட் பெற அல்லது புதுப்பிக்க சாதாரண முறையில் விண்ணப்பிக்கும் கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், விரைவாகப் பெறும் தட்கல் முறைக்கான கட்டணம் ரூ.3,500-ல் இருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான சாதாரணக் கட்டணம் ரூ.2,000-ல் இருந்து ரூ.3,500 ஆகவும், தட்கல் முறைக்கான கட்டணம் ரூ.6,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் தொலைந்து போனாலோ அல்லது சேதமடைந்தாலோ 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட்டை சாதாரண முறையில் பெற ரூ.5,000, தட்கல் முறையில் பெற ரூ.7,500 வசூலிக்கப்படும்.
60 பக்க பாஸ்போர்ட்டுக்கு சாதாரண முறையில் ரூ.6,000ம், தட்கல் முறையில் ரூ.8,500ம் கட்டணம் செலுத்த வேண்டும். 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் பெற அல்லது புதுப்பிக்க சாதாரண முறையில் ரூ.1,750-ம், தட்கல் முறையில் ரூ.4,250-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். (முன்பு 8 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு புதிய விண்ணப்பங்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது). சிறார்களின் பாஸ்போர்ட் தொலைந்து போனால் மாற்று பாஸ்போர்ட் பெற சாதாரண முறையில் ரூ.4,250-ம், தட்கல் முறையில் ரூ.6,750-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.
