சிவராஜ் சிங் சவுகான் மகன் தொடர்ந்த அவதூறு வழக்கு உயர் நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி

ஜபல்பூர்: ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் மகன் கார்த்திகேய சிங் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு எதிராக போபாலில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் மகன் கார்த்திகேய சிங் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

அதில், கடந்த 2018-ம் ஆண்டு ஜபுவாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, பனாமா பேப்பர்ஸ் கசிவு குறித்துப் பேசிய ராகுல் காந்தி, அதில் தனது பெயரைக் குறிப்பிட்டு நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதாக கார்த்திகேய சிங் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, இந்த வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக போபால் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

அந்த சம்மனையும், அவதூறு வழக்கையும் ரத்து செய்யக் கோரி ராகுல் காந்தி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த நிலையில், ராகுல் காந்தி தரப்பில் வருத்தம் தெரிவித்து அவரது வழக்கறிஞர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ராகுல் காந்தியின் கருத்து கார்த்திகேய சிங் தொடர்பானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: