லஞ்சம் வாங்குவதற்காகவே ஒருங்கிணைந்த சிண்டிகேட் போல் செயல்படும் கர்நாடக கலால் துறை: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் மைத்துனரும், பெலகாவி கோட்ட கலால் துறை கூடுதல் ஆணையருமான மஞ்சுநாத் மற்றும் அவருக்கு நெருக்கமான அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி முக்கியமான ஆவணங்களையும், ரொக்கம், தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கர்நாடக மாநில கலால் துறையில் ஒரு விசித்திரமான பண மோசடி முறை நடப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான அதிகாரிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் பெயர்களில் மதுபான உரிமங்களைப் பெற்று சட்டவிரோதமாக மதுபான வணிகம் செய்து வருகின்றனர்.

புகார்களின் அடிப்படையில், பெங்களூரு, மைசூரு மற்றும் பெலகாவி ஆகிய இடங்களில் உள்ள 14 வளாகங்களில் அமலாக்கத்துறை சோதனைகளை மேற்கொண்டது. இந்தச் சோதனை நடவடிக்கைகளின்போது, மஞ்சுநாத், அவரது ஓட்டுநர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது கூட்டாளிகளின் வளாகங்களில் இருந்து ரூ.5.5 கோடி ரொக்கம், ரூ.3.3 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயம் மற்றும் ரூ.7.8 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாநில கலால் துறையானது, அரசு அதிகாரிகள், அவர்களின் கூட்டாளிகள் மற்றும் தனிநபர்களைக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த சிண்டிகேட் நெட்வொர்க்காக லஞ்சம் வசூலிப்பதற்காகச் செயல்பட்டுள்ளது. இந்த நெட்வொர்க், ஊழல் பணத்தின் மூலம் இயங்கும் ஒரு சீரான இயந்திரம் போல செயல்படுகிறது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: