எதிர்ப்பாளர்களின் குடியுரிமையைப் பறிக்க மோடி அரசு சதி: காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது ‘எக்ஸ்’ வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: சாதாரண மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதில் மோடி அரசு மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறது. பாஸ்போர்ட் கூட ஒருவரின் குடியுரிமையை நிரூபிக்காது என அறிவிப்பதன் மூலம், அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் இந்தியர்களின் குடியுரிமையை எந்தவிதக் காரணமுமின்றி தன்னிச்சையாகப் பறிப்பதற்கு அவர்கள் அடித்தளம் அமைத்து வருகின்றனர்.

தங்களின் அரசியல் நோக்கங்களுக்காக, குறிப்பிட்ட சமூகத்தினரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க அவர்கள் செய்த ரகசிய வேலைகளை நாங்கள் நன்கு அறிவோம். நீங்கள் இந்தியர் என்பதை நிரூபிக்க பாஸ்போர்ட் அல்லது வேறு ஏதேனும் ஆவணங்களை வைத்திருந்தாலும், இந்த பாசிச ஆட்சி தங்களின் அரசியல் பழிவாங்கலுக்காக உங்கள் குடியுரிமையைப் பறிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ரேணுகா சவுத்ரி கூறுகையில், ‘‘பாஸ்போர்ட் குடியுரிமைக்கான சான்று அல்ல என ஒன்றிய வெளியுறவுத் துறை கூறுகிறது. அப்படியானால் எதுதான் சான்று? வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியில் அடையாள ஆவணமாக பாஸ்போர்ட் மட்டும் எப்படி ஏற்கப்படுகிறது? என்பதை ஒன்றிய அரசு நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: