புவனேஸ்வர்: ஒடிசா மாநில முதல்வராக நவீன் பட்நாயக் இருந்தபோது அவரது தனி உதவியாளராக இருந்தவர் வி.கே.பாண்டியன். ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். கடந்த 2023 அக்டோபரில் தனது ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிஜு ஜனதா தளத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். 2024 சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் வியூகங்கள் அனைத்தையும் இவரே வகுத்தார்.
ஆனால், அந்தத் தேர்தலில் 24 ஆண்டு கால பிஜேடி ஆட்சி முடிவுக்கு வந்து பாஜ வென்றதால், தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதாக வி.கே.பாண்டியன் அறிவித்தார். அவரது மனைவி சுஜாதா ரவுத்தும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி. ஒடிசாவில் பாஜ ஆட்சியமைத்து சுமார் ஒன்பது மாதங்கள் வரை அரசு அதிகாரியாகத் தொடர்ந்த சுஜாதா, கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
முந்தைய பிஜேடி ஆட்சியில் பெண்கள் மேம்பாட்டுக்கான ‘மிஷன் சக்தி’ திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. இந்நிலையில், சுஜாதா பிஜு ஜனதா தளம் கட்சியில் நேற்று இணைந்தார். புவனேஸ்வரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான சங்க பவனில் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் தலைமையில் சுஜாதா கட்சியில் இணைந்தார்.
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள நிலையில், தற்போது அவரது மனைவி கட்சியில் இணைந்திருப்பதால் கட்சியின் எதிர்காலத் தலைவராக சுஜாதா பொறுப்பேற்கக்கூடும் என ஊகங்கள் எழுந்துள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பேசிய நவீன் பட்நாயக், ‘‘பத்திரிகைகளுக்கும் பொதுமக்களுக்கும் மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்த விரும்புகிறேன்; அடுத்த தேர்தல்களிலும் பிஜு ஜனதா தளத்தை நானே வழிநடத்துவேன்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
