ஆபரேஷன் சக்ரா டிஜிட்டல் கைது மோசடிகள் தொடர்பாக 16 மாநிலங்களில் சிபிஐ சோதனை: சென்னையை சேர்ந்தவர் உள்பட 2 பேர் கைது

புதுடெல்லி: டிஜிட்டல் கைது மோசடிகள் தொடர்பாக 16 மாநிலங்களின் 80 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். டிஜிட்டல் கைது மோசடி என்பது, சைபர் தொழில்நுட்பத்தை பயன்படுததி நடத்தப்படும் மிகவும் ஆபத்தான முறையில், மிரட்டி பணம் பறிக்கும் முறைகளில் ஒன்று. இந்த மோசடியில் ஈடுபடுவோர் காவல்துறை அதிகாரிகள், ஒன்றிய அரசின் முகமை புலனாய்வாளர்கள் அல்லது நீதித்துறை அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து கொண்டு, மக்களை தொடர்பு கொள்கின்றனர்.

அப்போது தொடர்பு கொள்ளப்படுபவர்கள் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு விட்டதாகவும், அதற்கான சட்ட நடவடிக்கையை தவிர்க்க பணம் செலுத்த வேண்டும், இல்லையெனில் கைது செய்யப்படுவார்கள் என மிரட்டப்படுகிறார்கள். இந்த மோசடியின் உச்சமாக இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை போலவே ஒத்த இணையதள முகவரி கொண்ட ஒரு இணையதளமும் உள்ளது.

அந்த வகையில் உச்ச நீதிமன்ற இணையதளத்தை போல் தோற்றமளிக்கும் இணைய முகவரியை பயன்படுத்தி, நூற்றுக்கணக்கான மக்களை டிஜிட்டல் கைது மோசடிகளில் சிக்க வைத்த கும்பலை முறியடிக்க 16 மாநிலங்களில் உள்ள 80 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். சைபர் மோசடி தொடர்பான 200க்கும் மேற்பட்ட வழக்குகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் இந்த கும்பலை முறியடிக்க ஆபரேஷன் சக்ரா என்ற நடவடிக்கையை சிபிஐ மேற்கொண்டது.

தமிழ்நாடு, டெல்லி, குஜராத், பஞ்சாப், அசாம், மகாராஷ்டிரா, அரியானா, தெலங்கானா, ஆந்திரா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், மணிப்பூர், கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய 16 மாநிலங்களில் உள்ள 80 இடங்களில் சிபிஐயின் 60 சிறப்பு குழுக்கள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.  அப்போது சென்னையை சேர்ந்த பி.நரேஷ் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த சஞ்சீப் சா ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் போலி நிறுவனங்களை உருவாக்கி, வங்கி கணக்குகளை திறந்து, பணப்பரிவர்த்தனைகளை மறைக்க, நிதி கட்டமைப்பை உருவாக்கியது தெரிய வந்தது. மேலும், குற்றச்செயல்களின் மூலம் கிடைத்ததாக சந்தேகிக்கப்படும் சுமார் ரூ.2 கோடி வரை பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: