கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக சிறுவனை கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள்; தாய்க்கு ஆயுள் தண்டனை

*கோவை கோர்ட் தீர்ப்பு

கோவை : கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக 6 வயது சிறுவனை அடித்து கொலை செய்த வழக்கில், தாயுடன் கள்ளக்காதல் உறவில் இருந்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், பெற்ற தாய்க்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.கோவை வடவள்ளி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் அருண்(38). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 2011ம் ஆண்டு திவ்யா(32) என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

இந்த தம்பதிக்கு அபிஷேக்(6) என்ற மகனும், ஹர்ஷினி(3) என்ற மகளும் இருந்தனர். திருமணத்திற்கு பிறகு திவ்யா அடிக்கடி பிற ஆண்களுடன் செல்போனில் சிரித்து பேசி அரட்டை அடித்து வந்துள்ளார். இதனை அருண் கண்டித்தார்.

ஆனாலும் திவ்யா தனது பழக்கத்தை மாற்றி கொள்ளவில்லை. பின்னர் 2019ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். திவ்யா தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு சாயிபாபா காலனி கோவில்மேட்டில் வாடகை வீட்டில் வசித்தார். அருண் தனது மகன் அபிஷேக் படிக்கும் பள்ளிக்கு அடிக்கடி சென்று பார்த்து வந்துள்ளார்.

இதற்கிடையே திவ்யா அங்குள்ள அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு உடன் வேலை பார்த்த தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜதுரை(35) என்பவருடன் திவ்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.

பின்னர் அதேபகுதியில் வேறு வீடு வாடகைக்கு எடுத்து இருவரும், கணவன் – மனைவியாக வாழ துவங்கினர். இவர்களது உல்லாசத்துக்கு சிறுவன் அபிஷேக் இடையூறாக இருப்பதாக கருதி அடிக்கடி சிறுவனை தாக்கி உள்ளனர்.

மேலும் இருவரும் சேர்ந்து சிறுவன் அபிஷேக்கையும், 3 வயது பெண் குழந்தையையும் துன்புறுத்தி வந்துள்ளனர். கட்டையாலும், கரண்டியால் சூடு வைத்தும் சிறுவனை சித்ரவதை செய்துள்ளனர். இதேபோல், கடந்த 19-4-2020ம் ஆண்டு இருவரும் சேர்ந்து சிறுவனை குச்சியால் தாக்கியதில் மயங்கி விழுந்தான்.

இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அபிஷேக் பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் பயந்து போன, ராஜதுரை, திவ்யா இருவரும் தலைமறைவாகினர். சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பாக சாயிபாபா காலனி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதல் ஜோடி இருவரையும் தேடி வந்தனர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை எஸ்சி, எஸ்டி கோர்ட்டில் நடந்து வந்தது.

நேற்று நடந்த இறுதி விசாரணையில், சிறுவனை கொலை செய்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் இரட்டை ஆயுள் தண்டனை தனிதனியாக அனுபவிக்க வேண்டும் என்றும், இதே போல சிறுவனின் தாய்க்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி விவேகானந்தன் தீர்ப்பு கூறினார்.அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணி ஆஜரானார்.

Related Stories: