*கள்ளக்காதலால் ஆத்திரம்
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே மனைவியை கொன்று கிணற்றில் வீசிய கணவனை போலீசார் கைது செய்தனர்.மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கோபி ராசிபுரத்தில் தனியாருக்கு சொந்தமான ஆலை ஒன்று உள்ளது.
இந்த ஆலையை தனியார் ஒருவர் குத்தகைக்கு எடுத்து அதனை மண்டபமாக மாற்றும் பணியை மேற்கொண்டிருந்தார். இந்த ஆலையில் உள்ள கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக சிறுமுகை போலீசாருக்கு கடந்த 17ம் தேதி தகவல் வந்தது.
இதனை தொடரந்து விரைந்து சென்ற மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாஸ்கரன், சிறுமுகை இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சாக்கு முட்டையை நீண்ட நேரம் போராடி கிணற்றிலிருந்து வெளியே எடுத்து பார்த்தபோது அதில் சுமார் 35 வயதில் மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கல்லை வைத்து கட்டிய நிலையில் சாக்கு முட்டையில் வைத்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, சில தினங்களுக்கு முன்னர் பீகாரில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்டோர் தங்கள் பணியை முடித்துவிட்டுஉரிய சம்பளத்தை பெற்றுக்கொண்டு பீகார் திரும்பியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் பீகார் மாநிலத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசார் அன்னூர் அடுத்துள்ள குருக்கிலியம்பாளையம் பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த வடமாநில இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சோட்டா லால் மண்டல்(28) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது மனைவி சங்கீதாவை (34) கொலை செய்து கிணற்றில் கல்லை கட்டி தூக்கி வீசியதும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் எனது மனைவி சங்கீதாவுக்கு வெவ்வேறு ஆண்களுடன் தகாத உறவு இருந்தது. பல முறை கண்டித்தும் திருந்தவில்லை. கடந்த 11ம் தேதி பொகளூர் அருகே நான் வேலை செய்து வந்த நிறுவனத்திற்கு அழைத்து வந்தேன்.
அன்று இரவு உடன் பணிபுரிந்த அனைவரும் உறங்கிய பின்னர் மனைவியை அழைத்து சென்று தொழிற்சாலையின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள செக்யூரிட்டி அறையில் நின்று அவரின் தகாத உறவை கண்டித்தேன். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது கழுத்தை நெரித்து கொலை செய்தேன். தொடர்ந்து யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக கல்லை கட்டி கிணற்றில் தூக்கி வீசினேன் என தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து போலீசார் அவரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு காரணமாக மனைவியை கண்டிக்கும் விதமாக அழைத்துச்சென்று துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அதே நிறுவனத்தில் உள்ள கிணற்றில் கல்லை கட்டி சாக்கு முட்டையில் வைத்துக்கட்டி கிணற்றில் வீசி விட்டு 3 நாட்களாக எதுவுமே நடக்காதது போல அங்கேயே சோட்டா லால் மண்டல் தங்கி இருந்துள்ளார்.
பின், பணிகளை முடித்து விட்டு உரிய சம்பளத்தையும் பெற்றுக் கொண்டு சோட்டா லால் மண்டல் சொந்த ஊரான பீகார் சென்று விட்டு தடயங்களை அழிப்பதற்காக நேற்று மீண்டும் பொகளூர் வந்தபோது போலீசாரிடம் சிக்கியது குறிப்பிடதக்கது.
