முந்தைய தொழில் கொள்கைகளை பேணுவதோடு வருங்கால தேவைகளை கருத்தில்கொண்டு புதிய தொழிற்கொள்கையை அரசு உருவாக்கும்: ஆளுநர் உரையில் தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: முந்தைய தொழில் கொள்கைகளை பேணுவதோடு, வருங்கால தேவைகளை கருத்தில்கொண்டு புதிய தொழிற்கொள்கையை அரசு உருவாக்கும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆளுநர் உரையில் கூறி இருப்பதாவது:
காவிரியில் உரிய நீருக்கு பதிலாக உபரி நீர்தான் தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசால் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், மேகதாது திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு முயன்று வருகிறது. இதனை தடுத்து நிறுத்தவும், தமிழ்நாட்டிற்கான நீரை உரிய காலத்தில் பெற்றுத் தரவும் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாக் வளைகுடா பகுதியில் தங்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அடிக்கடி கடுமையான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் இலங்கை கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப்படுவதும், அவர்களுடைய மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு நீண்டகாலம் பிடித்து வைக்கப்படுவதும், கணிசமான அளவில் அபராதங்கள் விதிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நீண்டகால பிரச்னைக்கு தீர்வுகாண ஒன்றிய அரசு வலியுறுத்துகிறது.

கடலுக்கு செல்கின்ற நீரை தடுக்கும் வகையிலும், மழைநீரினை சேமிக்கும் வகையிலும், தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள தொடர்ந்து அனுமதி மறுத்து வரும் கேரள அரசானது, அதற்கு மாறாக, புதிய அணையை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கேரள அரசின் புதிய அணை கட்டும் முயற்சியை தடுக்கவும், முல்லைப் பெரியாறு அணை பகுதியில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ளவும் அணையின் நீர்மட்டத்தினை உயர்த்தவும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைக்கவும், அதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி, தென் மாநிலங்களில் உள்ள நதிகளை இணைக்கவும் அரசு தீவிர முயற்சி மேற்கொள்ளும். கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, சிவகளை, அழகன்குளம், அரிக்கமேடு, சலுவன்குப்பம் மற்றும் பூம்புகார் ஆகிய தளங்களில் தொடர்ந்து தொல்லியல் துறை ஆராய்ச்சி மேற்கொள்ளவும், கீழடி, ஆதிச்சநல்லூர் ஆகிய இரு தளங்களுக்கு யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரம் கிடைக்கவும், இத்தளங்களுக்கு பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவும் வழிவகை செய்யப்படும். தமிழ்நாட்டை உலகளாவிய பாரம்பரிய மற்றும் சூழல்சார் சுற்றுலாத்தலமாக அரசு மாற்றும்.

2036ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை 15 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உருவாக்கிட அரசு உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும். மாநிலத்தின் பொருளாதார நிலைத் தன்மையையும், தொழில்துறை வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் நோக்குடன், முந்தைய தொழில் கொள்கைகளின் தொடர்ச்சியை பேணுவதோடு, தற்கால மற்றும் வருங்கால தேவைகளை கருத்தில்கொண்டு, ஒரு புதிய தொழிற்கொள்கையை இந்த அரசு உருவாக்கும்.

பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம் ஒன்று தலைமைச் செயலாளர் தலைமையில் ஏற்படுத்தப்படும். இந்த ஆணையத்தின் மூலம், 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்யும் நிறுவனங்கள் அல்லது 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு விரைந்து தொழில் தொடங்க அனுமதியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப, குறித்த நேரத்தில், எவ்வித ஒளிவுமறைவின்றி, தேர்வாணையங்கள் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு முறைப்படி காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாத்து சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்கும், அவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் உறுதுணையாக இருக்கும். இந்த அரசு, ஒரு உண்மையான மதச்சார்பற்ற சமூகநீதி’ அரசாக திகழும். அனைத்து வகையிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகநீதியினை நிலைநாட்டும் அரசாக இந்த அரசு திகழும். மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

கோயில்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் அனைத்தும் அதன் புனிதமான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். ஆசிரியர்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படும். அவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டங்கள் மேலும் செம்மைப்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: