சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் அர்லேகர் உரையாற்றினார். அதில் கூறியிருப்பதாவது:
ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் செலுத்தும் வரியில் இருந்து தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய உரிய நிதிப் பகிர்வினை கோருவதற்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும். உச்ச நீதிமன்றம் வரை சென்று நிதிப் பகிர்வினை சட்டரீதியாகப் பெறுவதற்காக சட்ட வல்லுநர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்படும். தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒவ்வொரு ரூபாய் வருவாயும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வில் ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறை அறிக்கையாக வெளியிடப்படும். மேலும், தமிழ்நாட்டிற்குரிய நியாயமான நிதிப் பகிர்வை ஒன்றிய அரசிடமிருந்து பெறுவது உறுதி செய்யப்படும்.
அரசுக்கு நியாயமாகச் சேர வேண்டிய, திசைமாறிச் சென்ற வருவாயை முறையாக அரசின் கருவூலத்திற்கு கொண்டு வர இந்த அரசு ஏற்கனவே ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. வருவாய் வரவுகளில் ஏற்படும் அனைத்து இழப்புகளையும், அதேபோல் அரசுப் பணிகள் மற்றும் இதர அரசு செலவினங்களில் ஏற்படும் இழப்புகளையும் தடுத்து, நிதிநிலையை மீண்டும் சீரானப் பாதைக்குக் கொண்டு வர இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை இந்த அரசு முழுமையாக நிறைவேற்றும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது இந்த அரசு மிகக் கடுமையான, கண்டிப்பான, விரைவான நடவடிக்கைகள் எடுத்து, உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் பொருட்டு உருவாக்கப்பட்ட ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை‘, 2,545 புதிய பணியிடங்களுடன், 319 புதிய நான்கு சக்கர ரோந்து வாகனங்கள், 101 இரு சக்கர வாகனங்கள் மற்றும் டிரோன்களுடன் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இப்பணியினை மிகச் சிறப்பாகச் செய்துமுடிக்கும்.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு முதற் காரணம் மாநிலத்தில் பரவலாகக் கிடைக்கும் போதைப்பொருள் புழக்கம்தான். போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதில் இந்த அரசு முழு மூச்சுடன் செயல்படும். போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படையை அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்க இந்த அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் கருவூலத்திற்கு வரவேண்டிய வருவாய் வேறு வழிகளில் திசைமாறிச் செல்வதை தடுத்து, அது முறையாக வந்து சேருவதை உறுதி செய்வதற்காக, முறையான ஒழுங்குமுறை மற்றும் அமலாக்கத்தின் மூலம் திட்டமிட்ட சட்டவிரோத கனிமத் தொழிலும், வரி ஏய்ப்பும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுகின்றன.
வண்டல் மண்ணை விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு விலையில்லாமல் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், தற்போதுவரை 18,274 ஏரிகள் மற்றும் குளங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.
