சென்னை: வாகன உரிமம் புதுப்பிப்பு மற்றும் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 40 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.37.81 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தியாவிலேயே அதிகளவில் வாகனங்கள் பதிவு மற்றும் புதுப்பிக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. சராசரியாக ஆண்டுக்கு தமிழகத்தில் மட்டும் 15 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்படுகிறது. தமிழகத்தில் தற்போது சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி என 91 இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இதனால் புதிய வாகனங்கள் பதிவு செய்து மற்றும் பழைய வாகனங்கள் புதுப்பிப்பது, ஓட்டுநர் உரிமம் பெறுவதும் உள்ளிட்டவைகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலான கட்டணம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இடைத்தரகர்கள் உதவியுடன் வசூலிக்கப்பட்டுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருணுக்கு தொடர் புகார்கள் வந்தது.
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் உத்தரவுப்படி ஐஜிக்கள் துரைக்குமார், லட்சுமி ஆகியோரது மேற்பார்வையில், தமிழகம் முழுவதும் 40 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நேற்று மதியம் 12 மணி முதல் இரவு வரை ஒரே நேரத்தில் மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பிக்கள் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.
சென்னை மண்டலத்தில் வளசரவாக்கம் வட்டார போக்குவரத்து அலுவகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 45 ஆயிரத்து 640 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. புளியந்தோப்பு டிம்லர்ஸ் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஸ்பி பிரியதர்ஷினி தலைமையில் இன்ஸ்பெக்டர் விஸ்வகுமார், நாகலட்சுமி குழுவினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.9,100 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கொளத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.37,560 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அண்ணாநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.14,470 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.69,020 பணமும், குடியாத்தம் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் இருந்து ரூ.15,500 பணமும், பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.21,370 பணமும், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2,31,100 பணமும், செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.34,610 பணம் மற்றும் ஜி.பே மூலம் ரூ.98,688 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3,77,300 பணமும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.1,87,650 பணமும், திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.75 ஆயிரம் பணமும், திருச்சி ேமற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1,45,610 பணமும், அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.29 ஆயிரம் பணமும், பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.39,140 பணமும், கரூர் மாவட்டம் குளித்தலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.35,090 பணமும், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.3 ஆயிரம் பணம் மற்றும் ஜி.பே மூலம் ரூ.1,55,850 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1,31,190 பணமும், நாகப்பட்டினம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.57,600 பணமும், மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.1,75,730 பணமும், கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.63,100 பணமும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.36,100 பணமும், ஜி.பே.மூலம் ரூ.2,400 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து கழக யூனிட் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1,03,590 பணமும், தர்மபுரி பாலக்கோடு மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.11,720 பணமும், கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1,08,190 பணமும், திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.81,400 பணமும், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.1,01,500 பணமும், சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.50,100 பணமும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.65,040 பணமும், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1,92,040 பணமும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.1,29,900 பணமும், திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.4 ஆயிரம் பணமும், தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.45,050 பணமும், திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.92,200 பணமும், கன்னியாகுமரி மாவட்டம் நகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.51,400 பணம் என மொத்தம் 37 லட்சத்து 81ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
