சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரை முடிந்ததும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் அலுவலர் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், முதல்வர் விஜய், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட 17 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 3 நாள் நடைபெறும். அதன்படி, 19ம் தேதி (இன்று) மற்றும் 22, 23 ஆகிய 3 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும். பேரவை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கும். 3 நாட்கள் கேள்வி, பதில் இருக்காது. முதல் நாள் கூட்டத்தில் சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு, சட்டப்பேரவை முன்னாள் செயலாளர் சி.கு.ராமசாமி, திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, கே.ராஜன், பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
அதைதொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப் பெற்று விவாதம் தொடங்கும். 20ம் தேதி (சனிக்கிழமை), 21ம் தேதி (ஞாயிறு) அரசு விடுமுறை நாள் என்பதால் பேரவை கூட்டம் இல்லை. 22ம் தேதி (திங்கள்) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடர்ச்சியாக நடைபெறும். 23ம் தேதி (செவ்வாய்) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீதான விவாதத்துக்கு பதிலுரை மற்றும் அரசினர் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்தல் மற்றும் நிறைவேற்றுதல், ஏனைய அரசினர் அலுவலர்கள் எடுத்துக்கொள்ளப்படும். இதைத்தொடர்ந்து பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படும்.
இரண்டு முறை தேசிய கீதம் பேரவையில் பாடப்பட்டதாக கேட்கிறீர்கள். இது ஒன்றும் பெரிய மரபு இல்லை. நமக்கு தமிழ்த்தாய் வாழ்த்து தான் முக்கியம். அது முதலில் பாடப்பட்டது. அதைத்தான் நாம் பார்க்க வேண்டும். சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்.அதிமுக சட்டமன்ற குழு தலைவர், கொறடா யார் என்பது எனது ஆய்வில் இருக்கிறது. விரைவில் அதுபற்றி எனது முடிவை அறிவிப்பேன். ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர்களும் என்னிடம் விளக்கம் அளித்து கடிதம் கொடுத்துள்ளனர். அது எனது ஆய்வில் உள்ளது.
