தனிநபர் வருமான உயர்வே உண்மையான வளர்ச்சி: விஐடி நிறுவனர் விசுவநாதன் பேச்சு

சென்னை: சென்னையில் தமிழியக்கம், டாக்டர் உ.வே.சா நூல் நிலையம், சேக்கிழார் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து நடத்திய முனைவர் சுந்தரமூர்த்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு விஐடி நிறுவனர்-வேந்தர் தமிழியக்கத்தின் தலைவர் விசுவநாதன் தலைமையேற்று பேசியதாவது:
மறைந்த முனைவர் சுந்தரமூர்த்தி இனிமையான மனிதர். யாரையும் குறை சொல்லாத, கடிந்து பேசாதவர். 32 ஆண்டு காலம் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர், தமிழ் பணியில் இருந்து மட்டும் ஓய்வு பெறவில்லை. அவருடைய இழப்பு தமிழ் உலகுக்கு மாபெரும் இழப்பாகும். ஆட்சியாளர்கள் தன்னுடைய மொழி தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது உண்டு. அவரவர் தாய் மொழி பற்று தவறு இல்லை. பிறர் மீது திணிப்பது தான் பிரச்சனை. இவ்வாறு, பிறரை கட்டாயப்படுத்தும் நிலையை மாற்ற வேண்டும். தமிழ் மொழியை பிற மாநிலத்தவர் கட்டாயம் படிக்க வேண்டும் என்று நாமும் கூறவில்லை. பிற நாட்டு விமான அறிவிப்புகள் தமிழில் ஒலிக்கின்றன. ஆனால், இங்கு அதுபோன்ற நிலை இல்லை. எனவே, விமானத்தில் தமிழ் மொழியில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். தமிழ்நாடும், தமிழர்களும் முன்னேற வேண்டும் என்று தான் இ.சுந்தரமூர்த்தி இறுதி வரை உழைத்தார். தமிழ்நாடு பொருளாதாரத்திலும் முன்னேற வேண்டும். தனிநபர் வருமானமும் உயர வேண்டும். அப்போது தான் உண்மையான வளர்ச்சி ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் நீதியரசர் ஜெகதீசன் பேசுகையில், “தமிழின் போராளியாக இ.சுந்தரமூர்த்தி திகழ்ந்தார். தன்னுடைய பதவிகளை தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் சேவை செய்ய பயன்படுத்தினார். அவர் விட்டு சென்ற தமிழ் தொண்டினை தொடர்ந்து செய்வது தான் நாம் அனைவரும் அவருக்கு செய்யக்கூடிய உண்மையான அஞ்சலியாக இருக்கும்’’ என்றார். நிகழ்ச்சியில், தமிழியக்கத்தின் பொது செயலாளர் அப்துல்காதர், பொருளாளர் புலவர் பதுமனார், மாநில செயலாளர் சுகுமார், முனைவர் சுந்தரமூர்த்தியின் மூத்த மகன் எழில் நம்பி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

Related Stories: