திமுக ஆட்சியில் கொண்டு வந்த ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மாற்றம்: ‘திறன் தமிழ்நாடு’ என்ற பெயரில் செயல்படும் என அறிவிப்பு

சென்னை: திமுக ஆட்சியில் கொண்டுவந்த ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி ‘திறன் தமிழ்நாடு’ என்ற பெயரில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ், 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்வித் திறன், தொழில்நுட்ப அறிவு, வேலைவாய்ப்பு திறன் மற்றும் தொழில் முனைவுத் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, டேட்டா அனலிட்டிக்ஸ், சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட உலகளாவிய சந்தையில் அதிக தேவை கொண்ட துறைகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, பல்வேறு முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு தொழில்துறை தேவைகளுக்கேற்ப சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டதுடன், வளாக நேர்காணல்கள் மூலமாக வேலைவாய்ப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் ‘திறன் தமிழ்நாடு’ என மாற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பயனர் அடையாளம் (@naanmudhalvan_) அப்படியே தொடர்ந்தாலும், அதன் முகப்புப் பெயர் மட்டும் ‘TN Skill Corporation’ என மாற்றப்பட்டுள்ளது. இதனுடன், மே 15ம் தேதிக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்த பல்வேறு பதிவுகள் தற்போது சமூக ஊடகப் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பயிற்சி முகாம்கள், மாணவர் சாதனைகள், வேலைவாய்ப்பு முகாம்கள், ஒப்பந்த கையெழுத்து நிகழ்வுகள், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் அறிக்கைகள் பலவும் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அரசுத் திட்டங்கள் தொடர்பாக வெளியிடப்படும் தகவல்கள் வெறும் அரசியல் விளம்பரங்களாக மட்டுமல்லாமல், பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் கொள்கை வடிவமைப்பாளர்கள் பயன்படுத்தக்கூடிய பொது ஆவணங்களாகவும் கருதப்படுகின்றன.

குறிப்பாக, ஒரு திட்டத்தின் வளர்ச்சி, அதன் பயனாளிகள் எண்ணிக்கை, செலவிடப்பட்ட நிதி, தொழில்துறை ஒத்துழைப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு விளைவுகள் போன்றவை வரலாற்றுப் பதிவுகளாகவும் செயல்படுகின்றன. எனவே, அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும், முந்தைய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட நிர்வாகத் தரவுகள் மற்றும் பதிவுகள் பொதுமக்கள் பார்வைக்கு கிடைக்க வேண்டும் என்பதே ஜனநாயக நிர்வாகத்தின் அடிப்படை கோட்பாடு என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

வீண் தம்பட்டம்
முந்தைய அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களை, அரசியல் காரணங்களுக்காக முடக்க நினைப்பது அல்லது பெயர் மாற்றித் தங்களின் திட்டமாக தம்பட்டம் அடிப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல என திமுக ஐடிவிங் பதிவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரு மாநிலத்தில் ஆட்சி மாறினாலும், மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கும் மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றித் தொடர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பழைய திட்டங்களின் வரலாற்றை அழித்துவிட்டு, புதிய பெயர்களைச் சூட்டி சுய விளம்பரம் தேடிக் கொள்ளும் ‘ஸ்டிக்கர் அரசியல்’ இளைஞர்களின் வேலைவாய்ப்பையும் எதிர்காலத்தையும் பாதிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: