மதுரை: ‘சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க…’ என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.
அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது: வளர்த்த கடா மார்பில் பாய்ந்துள்ளது. விஜயபாஸ்கர் கட்சிக்கு வரும் முன்பு தனக்கும், தன் குடும்பத்திற்கும் இருந்த சொத்துக்கள் என்ன? இப்போது வைத்திருக்கும் சொத்துக்கள், முதலீடுகளை அவர் அதிமுகவிற்கு எழுதி வைத்துவிட்டு, வேறு கட்சிக்கு போவாரா? இங்கே ஆண்டு அனுபவிப்பீர்கள், சொத்துக்களை சேர்த்து முதலீடு செய்வீர்கள், செல்வாக்கை சேர்ப்பீர்கள். முடிவில் தலைமையை விமர்சித்து, தொண்டர்கள், மக்களை கைவிட்டு, சுயநலமாக உங்கள் முதலீடுகளை காப்பாற்ற, வழக்கிலிருந்து தப்ப, கட்சியை காட்டிக் கொடுக்கிறீர்கள். வயிறு எரிகிறது. தலைமை சரியில்லையென பதிவு எப்போது போடுவது? 10 ஆண்டுகள் அவரது காதை கடித்து, காலைப்பிடித்து, எத்தனை விஷயங்களை செய்தீர்கள்.
எங்களுக்கு தெரியாதா? விஜயபாஸ்கருக்கு என்ன கேடு வந்தது? அதிமுகவில் சேரும் முன்பு உங்கள் குடும்பத்தை யாருக்காவது தெரியுமா? மனசாட்சி இல்லையா? எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆன்மாக்கள் உங்களை சும்மா விடுமா? அதிகாரத்தை அனுபவித்து எம்எல்ஏக்கள் கட்சி மாறினால், தொண்டர்கள் கொதித்தெழுந்து விளக்கமாறு, செருப்பால் ஊருக்குள் விடாமல் அடி கொடுப்பார்கள். தொண்டர்கள் இதைச்செய்யாத தைரியத்தில்தானே மாற்றுக் கட்சிக்கு செல்கிறார்கள்.
சுகங்கள் அனுபவித்து, கான்ட்ராக்ட், கல்குவாரி எடுத்து, எத்தனை கல்லூரி உங்களிடம் உள்ளது? இதெல்லாம் உங்கள் தாத்தா போட்டதா? தொண்டர்கள் கொதித்தெழுந்தால் நீங்கள் நாசமாக போவீர்கள். அங்கே நாய் மாதிரி கேட்டில் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கெல்லாம் சூடு சொரணை இல்லையா? சோற்றில் உப்புப் போட்டுத்தானே சாப்பிடுகிறீர்கள்? உங்களைப் போன்ற ஓடுகாலிகளை நம்பி இந்த கட்சியில்லை. தேர்தலுக்கு முன்பே தவெகவில் சேர்ந்திருக்கலாமே? அதிமுகவிற்கே இந்த கதியென்றால், விஜய்க்கு என்ன கதியோ? , தங்கள் வாழ்வாதாரமே முக்கியமென கட்சி தாவுகிறவர்களை எச்சரிக்கிறேன், தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
