வேட்புமனுவில் கூறியிருந்த தகவல்கள் முரண்பாடு விவகாரம்; விஜய், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வியாசர்பாடியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், இரு தொகுதிகளிலும் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து விசாரிக்க வருமான வரித்துறைக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

திருவல்லிக்கேணியை சேர்ந்த வாக்காளர் குமாரவேல் என்பவர் தாக்கல் செய்த மனுவில், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் சொத்து விவரங்களில் முரண்பாடுஉள்ளதாக கூறியிருந்தார். மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் சொத்து விவரங்களிலும் முரண்பாடுகள் உள்ளதாகக் கூறி மயிலாப்பூர் தொகுதி வாக்காளர் கவுதம் சிவா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த3 வழக்குகளும், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், முதல்வர் விஜய் முதலில் தாக்கல் செய்த வேட்புமனுவை திருத்தம் செய்து புதிய மனுவை ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டார். இரு தொகுதிகளிலும் அவர் குறிபிட்டிருந்த சொத்து மதிப்புகள் சரியாக உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் வழக்கு தான் தொடர முடியும். ஏற்கனவே, இதே கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார். அவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், முதல்வர் விஜய், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், பா.ஜ. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: