எரிபொருள் விலை பல மடங்கு உயர்வால் ஏர் இந்தியா விமான சேவை குறைப்பு

சென்னை: எரிபொருள் விலை பல மடங்கு உயர்வால் சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமான சேவை குறைக்கப்பட்டுள்ளதோடு, பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஏர் இந்தியா விமான நிறுவனம், சென்னையில் இருந்து வெளிநாடுகள் மற்றும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்ததோடு, பல வழித்தடங்களில் விமான சேவைகளை முழுவதுமாக ரத்து செய்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை- அந்தமான்- சென்னை இடையே, தினமும் 4 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்கி வந்தது. அதன்பின்பு ஏர் இந்தியா விமானங்கள் நிறுத்தப்பட்டு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை நடந்தது. அதுவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக முழுவதும் நிறுத்தப்பட்டு விட்டது.

சென்னையில் இருந்து திருச்சிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள், தினமும் சென்னை- திருச்சி- சென்னை இடையே, 2 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் அந்த 2 விமானங்களும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திடீரென எந்தவித அறிவிப்பும் இல்லாமல், நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் கோவைக்கு, சென்னையில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் தினமும், சென்னை- கோவை- சென்னை இடையே, 2 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. அந்த விமானங்களையும், ஏர் இந்தியா நிறுவனம் நிறுத்தி விட்டது.

திருவனந்தபுரம், கொச்சி, ஐதராபாத் ஆகிய விமான நிலையங்களுக்கு இயக்கப்பட்டு வந்த ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும், படிப்படியாக ரத்து செய்யப்பட்டு, பயணிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சிங்கப்பூர், துபாய், இலங்கை, தமான், சார்ஜா, கோலாலம்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்டு வந்த ஏர் இந்தியா விமானங்களும், பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இந்தியா செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘எரிபொருள் விலை பல மடங்கு உயர்வு, எங்களுடைய ஒட்டுமொத்த செயல்பாடுகளில் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் தாக்கத்தால், விமானங்கள் ரத்து, சேவைகள் குறைப்பு போன்றவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், பயணத் தேதிகளை கட்டணம் இன்றி, மாற்றி கொடுத்தல், முழு தொகையையும் திருப்பிக் கொடுத்தல் போன்றவைகளை செய்து கொண்டு இருக்கிறோம். ஆகஸ்ட் வரையில் இதே நிலை நீடிக்கும். அதன்பின்பு நிலைமை சீரடைய வாய்ப்பு உள்ளது,’ என்றார்.

Related Stories: