புதுடெல்லி: தமிழகத்தில் 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பு இடங்களை தகுதிப் பட்டியலின் அடிப்படையில் நிரப்ப ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் 2025-2026ம் கல்வியாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற் படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வில், அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கான மாநில ஒதுக்கீட்டு இடங்கள் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் காலியாக இருந்து வந்தன.
இந்த இடங்கள் வீணாவதைத் தவிர்க்கும் வகையில், அவற்றை அகில இந்திய ஒதுக்கீட்டுக்குத் திருப்பி அளித்து, அதன்மூலம் தகுதிப் பட்டியலின் அடிப்படையில் அடுத்தகட்ட கலந்தாய்வை நடத்த ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்வாணி உள்ளிட்ட மருத்துவ மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மருத்துவ மேற்படிப்புகளில் இடங்கள் ஒருபோதும் வீணாகக் கூடாது என்பதே நீதிமன்றத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது என்று மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் அராதே ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பு இடங்கள் குறித்த விவரங்களை மாநில அரசு உடனடியாக ஒன்றிய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், ‘இந்த இடங்கள் அனைத்தையும் அகில இந்திய தகுதிப் பட்டியலின் அடிப்படையில் நிரப்ப ஒன்றிய அரசு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தற்போதைய கலந்தாய்வில் நடைமுறையில் உள்ள கட்-ஆப் மதிப்பெண்களையே இதற்கும் பயன்படுத்த வேண்டும்; தேவைப்பட்டால் மட்டுமே அதில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்’ என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறினர்.
இந்த உத்தரவு தற்போதைய வழக்கின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மட்டுமே பிறப்பிக்கப்படுவதால், எதிர்காலத்தில் இதனை உதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்து நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
