×

டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது: நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: கடந்த மே மாதம் நடந்த நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெலிகிராம் செயலி தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், நீட் மறுதேர்வையொட்டி வரும் 22ம் தேதி வரை டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டெலிகிராம் நிறுவனர் மற்றும் சிஇஓ பாவெல் துரோவ் நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
சில பயனர்கள் கசிந்த வினாத்தாள்களைப் பகிர்ந்துகொண்டதற்காக டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், வினாத்தாளை கசியவிட்ட நபர்களை தண்டிக்கவில்லை. அதற்கு பதிலாக, இந்தியாவில் உள்ள 15 கோடிக்கும் அதிகமான சாதாரண டெலிகிராம் பயனர்களை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தண்டித்துள்ளது. இந்த தடையால் எதுவும் மாறிவிடப் போவதில்லை. தற்பொழுது அந்த வினாத்தாள் கசிவுகள் மற்ற சமூக வலைதள செயலிகளுக்கு மாறிவிட்டன.

கடந்த சில வாரங்களில் மட்டும் இந்தியாவில் வினாத்தாள்களை பகிர்ந்த மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான சேனல்களை டெலிகிராம் நீக்கியுள்ளது. மேலும், தேதி மற்றும் திருத்தப்பட்ட பதிவுகளில் ‘திருத்தப்பட்டது’ என்ற குறியீட்டை இன்னும் தெளிவாக தெரியும் படி மாற்றி உள்ளோம். டெலிகிராம் எப்போதுமே நல்ல விஷயங்களுக்கான ஒரு சக்தி. அதனைத் தற்காலிகமாகத் தடை செய்வது மிகப்பெரிய தவறு. இந்த தடைக்கு பின்னால் ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபட்டிருக்கலாம். ஏனெனில் பார்டர் கேட்வே புரோட்டோகால் (பிஜிபி) ஹைஜாக்கிங் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட இந்தியாவிற்கு வெளியே உள்ள கோடிக்கணக்கான பயனர்களின் டெலிகிராம் அணுகலை தடுக்கிறது.

வாட்ஸ்அப்பை வைத்துள்ள மெட்டா நிறுவனம் ரிலையன்சில் முதலீடு செய்துள்ளது. எனவே டெலிகிராமை தடை செய்வதற்கான லாபியில் ரிலையன்ஸ், வாட்ஸ்அப் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு ரிலையன்ஸ், மெட்டா தரப்பில் பதில் தரப்படவில்லை.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெலிகிராம் வழக்கு
இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த வழக்கு நீதிபதி தேஜஸ் காரியா தலைமையிலான விடுமுறைக்கால அமர்வின் முன் குறிப்பிடப்பட்டது. அவர் இதனை அவசர அடிப்படையில் ஒப்புக்கொண்டார். டெலிகிராம் நிறுவன வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசின் டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்கும் நடவடிக்கையால் 15கோடிக்கும் அதிகமாக பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விபிஎன் மூலம் செயல்படுகிறது
இந்தியாவில் டெலிகிராம் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து அந்த செயலி நீக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விபிஎன் மூலமாக வெளிநாட்டு சர்வர்களில் இருந்து டெலிகிராம் செயலி இந்தியாவில் தொடர்ந்து செயல்படுவதாகவும் இது இந்திய அரசு தடை விதித்தும் பயனளிக்காது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Durov ,NEW DELHI ,India ,NEET ,
× RELATED நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக...