டேராடூன்: நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடியால் ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் படேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரியா குமாரி (23). இவர் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்விற்கு தீவிரமாக தயாராகி வந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணி வரை தனது அறையில் படித்துக் கொண்டிருந்த ரியா குமாரி, மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. அவரது தாய் பலமுறை கதவைத் தட்டியும் எவ்வித பதிலும் கிடைக்காததால், குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரியா குமாரி மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக போலீசார் அங்கு வந்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அவரது அறையிலிருந்து கைப்பற்றப்பட்ட தற்கொலை குறிப்பு கடிதத்தில், ‘நான் மற்றவர்களுக்கு சுமையாக இருக்கிறேன். எனது குடும்பத்தை மிகவும் நேசிக்கிறேன்’ என்று ரியா குமாரி குறிப்பிட்டிருந்தார். வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் காரணமாக ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வை இவர் எழுதியிருந்தார். அவர் எதிர்பார்த்த அளவு தேர்வில் சாதிக்க முடியவில்லையே என்ற கவலையில் அவர் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் மாவட்டத்தில் ஏற்கனவே மே மாதம் 15ம் தேதி பிரதீப் மஹிச் என்ற நீட் மாணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், உமேஷ் (22) என்ற மாணவர் சிகார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாய் மற்றும் இரண்டு உடன் பிறந்தவர்களுடன் வசித்து வந்தார். ஏற்கனவே நீட் தேர்வு எழுதியிருந்த நிலையில் மறுதேர்விற்காக படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள உத்யோக் நகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோடியும், தர்மேந்திரபிரதானும் தான் மாணவர்கள் பலிக்கு பொறுப்பு: ராகுல்காந்தி ஆவேசம்
ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட்டில் நீட் மறு தேர்வு தொடர்பாக 2 மாணவர்கள் பலியானது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட பதிவு:
இந்த மரணங்கள், சீர்கெட்ட மற்றும் ஊழல் மலிந்த ஒரு அமைப்பின் விளைவாகும். இதற்குப் பொறுப்பானவர்கள் மோடி அரசாங்கமும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் ஆவர்; மாணவர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, வினாத்தாள் கசிவு, தேர்வு நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைப்பவர்கள் ஆகியோருக்கு இவர்கள் தொடர்ந்து ஆதரவளித்து வந்துள்ளனர். இனி எந்தவொரு குழந்தையின் கனவும் இதுபோலச் சிதையக்கூடாது; எந்தவொரு பெற்றோரும் தங்கள் பிள்ளையை இதுபோல இழக்க நேரிடக்கூடாது. ஒவ்வொரு குடும்பத்தின் வலியும் இனி நாடு முழுவதும் ‘மாணவர்களின் குரலாக’ எதிரொலிக்கும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
