அகமதாபாத்: மேற்காசிய போரினால் வர்த்தக இடையூறுகள் இருந்த போதிலும் 2025-26 ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவாக 863 பில்லியன் டாலராக (ரூ.82 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் இந்திய பொருட்களுக்கு பரஸ்பர வரியாக 25 % வரி விதித்தார். பின்னர், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதால், கூடுதலாக 25% வரி விதித்தார். அதன் பின் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தின. இதில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
குஜராத் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் 12 ஆண்டுகால சாதனைகள் என்ற மக்கள் தொடர்பு நிகழ்ச்சியில் ஒன்றிய வர்த்தக துறை கூடுதல் செயலாளர் அஜய் பது நேற்று உரையாற்றும் போது கூறியதாவது:
அமெரிக்காவின் வரிகள் முதல் மேற்கு ஆசிய நெருக்கடிகள் வரை, இது மிகவும் கடினமான ஆண்டாக இருந்துள்ளது. இருப்பினும், ஏற்றுமதியை பொறுத்தவரை இந்தியா மிகவும் மீள்திறன் கொண்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி, 863 பில்லியன் டாலர்( சுமார் ரூ.82லட்சம் கோடி) என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி ஏறத்தாழ 441 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 863 பில்லியன் அமெரிக்க டாலராக, கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
