×

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ராகுல்காந்தி தலைமையில் 10,000 மாணவர்கள் திரண்டனர்: கோட்டாவில் குவிந்த மக்களால் பரபரப்பு

புதுடெல்லி: தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு தொடர்பாக ராகுல் காந்தி தலைமையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டனர். நீட் தேர்வுத்தாள் வெளியானது, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தியதில் முறைகேடு நடந்ததை கண்டித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் தொடர் மாணவர்கள் மாநாடு நடத்தி, மாணவர்களுடன் கலந்துரையாடப்போவதாக அறிவித்தார். இதற்கான முதல் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நேற்று நடந்தது. இதில், சுமார் 10,000 மாணவர்களை கூட்ட காங்கிரஸ் இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால் நேற்று பிற்பகல் முதல் ஏராளமான மாணவ, மாணவிகள் ராகுல்காந்தி தலைமையில் கூட்டம் நடக்கும் தசரா மைதானத்தை நோக்கி சென்றனர்.

அவர்களின் பெற்றோரும் அணி, அணியாக திரண்டு சென்றனர். அவர்கள் நீட் தேர்வு, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முறைகேடு ஆகியவற்றிக்கு எதிராக வீதிவீதியாக முழக்கங்களை எழுப்பி சென்றனர். நேற்று மாலையில் தசரா மைதானம் முழுவதும் மாணவ, மாணவிகளின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அவர்கள் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். நேற்று இரவு தசரா மைதானத்தில் அமைக்கப்பட்ட மேடைக்கு வந்த ராகுல்காந்தி, பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்யும் தேர்வு முறைகேடுகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் முதலில் கலந்துரையாடினார். மாணவர்களின் எதிர்காலத் திட்டங்கள், ஏன் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்குத் தயாராகத் தேர்ந்தெடுத்தார்கள், அவர்களின் கனவுகள் மற்றும் இதற்கான தயாரிப்புகளுக்குச் செலவிடப்படும் பணம் ஆகியவை குறித்து ராகுல் காந்தி மாணவர்களிடம் பேசினார்.

அதை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மத்தியில் ராகுல்காந்தி பேசியதாவது:
நான் ஒன்றை மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன்: இது ஒரு அரசியல் கூட்டம் அல்ல. இது உங்களைப் பற்றியது, உங்கள் எதிர்காலத்தைப் பற்றியது. இந்த மாலைப் பொழுது உங்களைப் பற்றியது; நீங்கள் எதிர்கொள்ளும் சூழல் மற்றும் அன்றாடம் நீங்கள் சந்திக்கும் சவால்கள் பற்றியது. இந்தியாவின் கல்வி முறை குழந்தைகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, நசுக்குகிறது. இது நாட்டிற்கு நல்லதல்ல. இந்த நாட்டில் உள்ள எந்தவொரு மாணவரும் அந்தச் சிறுமி உணர்ந்ததைப் போன்ற உணர்வை ஒருபோதும் அடையாத நிலையை உறுதி செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

  • நாட்டின் முக்கிய பயிற்சி மையங்களின் மையமாக கோட்டா திகழ்கிறது. இங்கு சுமார் 1.2 லட்சம் மாணவர்கள் பல்வேறு பயிற்சி நிறுவனங்களில் நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.
  • வரும் 21ம் தேதி நீட் மறுதேர்வு நடக்க உள்ள நிலையில் கோட்டா நகரில் ராகுல் காந்தி நடத்திய மாநாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags : Rahul Gandhi ,NEET ,Kota ,New Delhi ,Kota, Rajasthan ,CBSE Plus ,
× RELATED 360 எம்பிக்கள் பலத்தை பெறுவதற்காக...