ஏற்கனவே 4 பேரை திருமணம் செய்து விவாகரத்தான நிலையில் 5வது கணவராக பாடகரை கரம்பிடித்த 75 வயது நடிகை: வயதான காலத்தில் இணைந்த கலைக் குடும்பம்

 

நியூயார்க்: ஹாலிவுட் திரையுலகின் மூத்த நடிகை ஜேன் சீமோர் தனது 75வது வயதில் பாடகர் ஜான் ஜாம்பெட்டியுடன் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகை ஜேன் சீமோர் (75), கடந்த 1971ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை மொத்தம் நான்கு முறை திருமணம் செய்து கொண்டவர். தியேட்டர் இயக்குனர் மைக்கேல் அட்டன்பரோ (1971-1973), எழுத்தாளர் ஜியோஃப்ரி பிளானர் (1977-1978), தொழிலதிபர் டேவிட் ஃபிளின் (1981-1992) மற்றும் நடிகர் ஜேம்ஸ் கீச் (1993-2015) ஆகியோரை பல்வேறு காலகட்டங்களில் இவர் மணந்திருந்தார்.

இவருக்கு கேத்தரின் (44), சீன் (40), கிறிஸ்டோபர் (30) மற்றும் ஜான் (30) ஆகிய நான்கு பிள்ளைகளும், ஜென்னி (46), கேலன் (56) என இரண்டு வளர்ப்பு பிள்ளைகளும் உள்ளனர். கடந்த 2015ம் ஆண்டில் தனது நான்காவது கணவருடன் விவாகரத்து பெற்ற பிறகு, தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக பிரபல பாடகர் ஜான் ஜாம்பெட்டி (78) என்பவருடன் நட்பாக பழகி வந்தார். இந்நிலையில், நியூயார்க்கில் நடந்த பாடலாசிரியர்கள் ஹால் ஆஃப் ஃபேம் விழாவில் பங்கேற்ற ஜேன் சீமோர், ஜான் ஜாம்பெட்டியுடன் தனக்கு திருமண நிச்சயம் ஆகிவிட்டதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.

தனது வைர மோதிரத்தை காண்பித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், ‘எனது வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருக்க ஒரு பாடகர் மற்றும் பாடலாசிரியர் முன்வந்துள்ளார். எங்களது குடும்பங்கள் இசையால் பிணைக்கப்பட்டுள்ளன. 70 வயது என்பது புதிய 50 வயது போன்றது. சரியான நேரத்தில் தங்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது’ என்று கூறினார். ஜாம்பெட்டி ஏற்கனவே 43 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இருந்தவர் என்பதும், அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களின் திருமண அறிவிப்பு ஹாலிவுட் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: