ஐநா: ஐநா பாதுகாப்பு சபையில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுதல்;மத்திய கிழக்கில் அரசியல் தீர்வுகளை முன்னெடுத்தல், நீடித்த அமைதிக்கான மத்தியஸ்தம், உரையாடல் என்ற தலைப்பிலான விவாதம் நடந்தது.இதில் ஐநாவுக்கான இந்திய தூதர் ஹரிஷ் பர்வதனேனி பேசியது: வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதல்களை இந்தியா உறுதியாக எதிர்க்கிறது.
உலகளாவிய கடல்சார் பணியாளர்களில் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பிராந்திய நாடுகள் மீதும், வர்த்தகக் கப்பல்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களின் விளைவாக, பல இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர். வளைகுடா பிராந்தியத்தில் கிட்டத்தட்ட 1 கோடி இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு இந்தியாவிற்கு முன்னுரிமையாக உள்ளது.
இந்திய வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகச் சங்கிலிகள், இப்பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையைச் சார்ந்துள்ளன. இதில் ஏற்படும் எந்தவொரு பெரிய இடையூறும் இந்தியப் பொருளாதாரத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியாவை ஆழமாகப் பாதிக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
