லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் ஸ்பிரிங்ஃபீல்டு நகரில் 1929ம் ஆண்டு பிறந்த பெக்கி லிஞ்ச் எனும் மார்கரெட் கெர்ரி (97), தனது 3 வயது பருவத்தில் தத்தெடுக்கப்பட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு குடிபெயர்ந்தார். கடந்த 1935ம் ஆண்டு ‘ஏ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம்’ திரைப்படத்தில் தேவதையாக அறிமுகமான இவர், 1953ம் ஆண்டு வெளியான வால்ட் டிஸ்னியின் ‘பீட்டர் பேன்’ அனிமேஷன் படத்தில் புகழ்பெற்ற ‘டிங்கர்பெல்’ கதாபாத்திரத்திற்கு நேரடி உருவ மாதிரியாகவும், அசைவுகளுக்கான கலைஞராகவும் செயல்பட்டு உலக அளவில் கவனம் ஈர்த்தார்.
இத்திரைப்படத்திற்காக அனிமேஷன் கலைஞர்கள் இவரை 35 மில்லிமீட்டர் கேமராவில் முழுமையாகப் படம்பிடித்து, அந்த அசைவுகளின் அடிப்படையில் கதாபாத்திரத்தை வடிவமைத்தனர். புகழ்பெற்ற அனிமேஷன் கலைஞர் மார்க் டேவிஸ் இவரிடம், ‘மார்கரெட், டிங்கர்பெல் நீங்களாகவே இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’ என்று கூறியதை இவர் தனது வாழ்நாளில் பெருமையுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
‘தி ஆண்டி கிரிஃபித் ஷோ’ உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் நடித்த இவர், தனது 94 வயதில் ராபர்ட் போக்கி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக நேற்று இறந்தார். இவரது மறைவு உலகெங்கும் உள்ள டிஸ்னி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
