மதுரை: சோழவந்தான் அருகே அரசு பேருந்து ஒட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிய தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். பணிமனைக்கு திரும்பி கொண்டிருந்த அரசு பேருந்துக்கு வழிவிடாமல் தகராறில் ஈடுபட்ட தவெக நிர்வாகி தனுஷ்கோடி பட்டா கத்தியால் ஒட்டுநர் பிரசாந்தை தலையில் வெட்டிவிட்டு தப்பியோடினார்.
இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனுஷ்கோடியை உடனே கைது செய்ய வலியுறுத்தி சோழவந்தான் அரசு பேருந்து பணிமனையில் 300-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பணிமனை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சோழவந்தான் பணிமனையில் 55 அரசு பேருந்துகள் இயங்காமல் நிறுத்தப்பட்டன. பணிக்குச் செல்வோர் உள்ளிட்ட பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அரசு போக்குவரத்து கழக மேலாளர்கள், போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஓட்டுநரை தாக்கிய தனுஷ்கோடி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து சோழவந்தான் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த தனுஷ்கோடியை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே கருப்பட்டி கிராமம் அருகே உள்ள தோட்டத்தில் தனுஷ்கோடி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று தவெக நிர்வாகி தனுஷ்கோடியை கைது செய்தனர்.
ஏற்கெனவே தனுஷ்கோடி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், குண்டர் சட்டத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது தனுஷ்கோடியை போலீசார் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் தனுஷ்கோடியை அடைத்தனர்.
