பொன்னேரி: மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு ஸ்ரீதேவி நகரில் இரவு நேரங்களில் தொடர்ந்து குறைந்த மின்னழுத்தம் மற்றும் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாகவும், இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டாலும் சரிவர பதிலளிக்காமல் அலட்சிய போக்குடன் செயல்படுவதாகவும் கூறி பொன்னேரி – திருவொற்றியூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, மின்வெட்டு பிரச்னை தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்புகொண்டால் அலட்சியம் காட்டுவதாக கூறி காவல் துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புதிய மின் மாற்றிகளை அமைத்து சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக மின்வாரிய அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் பொன்னேரி – திருவொற்றியூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
