மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உணவுத்துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான வெங்கட்ரமணன் நேற்று விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சருடன் வந்த தவெகவினர் அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் கூட்டமாக உள்ளே நுழைந்ததால் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாக்கினர். இதனால், அவசர சிகிச்சைக்காக வீல் சேரில் கொண்டு வரப்பட்ட ஒரு நோயாளியை கொண்டு செல்ல முடியாமல் மருத்துவமனை ஊழியர்கள் தவித்தனர். இதேபோல் பாம்பு கடித்து உயிருக்கு போராடிய நபர் ஒருவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டார். தவெகவினர் கூட்டமாக நின்று கொண்டு வழிவிடாததால், உயிருக்கு போராடி கொண்டிருந்தவரை, சிகிச்சைக்கு அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து, மருத்துவமனையில் பல இடங்களில் அமைச்சர் ஆய்வுக்கு சென்றபோது, தவெகவினர் முண்டி அடித்துக்கொண்டு கூடவே சென்று, அட்ராசிட்டி செய்ததால், நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இத்தனை அக்கப்போரிலும், தனியார் புகைப்பட கலைஞர் ஒருவரை வைத்து, ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வரும் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ முகமது ஜமால் யூனுஸ், ரீல்ஸ் எடுப்பதிலேயே குறியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
