சென்னை: தமிழ் சினிமாவின் ‘டிரெண்ட் செட்டர்’ என்று போற்றப்பட்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று அதிகாலை 2 மணியளவில் காலமானார். அவரது உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. தமிழ் திரைப்பட உலகில் ‘இயக்குனர் இமயம்’ என்று போற்றப்பட்ட பாரதிராஜா (84), தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர் இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவராக திகழ்ந்தார். அவரை திரையுலக பிதாமகன் என பல மொழி திரைக்கலைஞர்களும் போற்றினர்.
மனோஜ் கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தினார். ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களை இயக்கியுள்ள அவர், உணர்வுப்பூர்வமான கிராமத்து மற்றும் நாட்டுப்புற கதைகளை வெள்ளித்திரையில் காட்டி உருக வைத்தார். அவரது ‘16 வயதினிலே’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோர கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’ போன்ற படங்கள் தமிழ் திரையுலகின் அற்புதமான படைப்புகள் என்று போற்றப்பட்டவை.
கே.பாக்யராஜ், ராதிகா, கார்த்திக், ராதா, ரேவதி, சுகன்யா, நெப்போலியன், ரஞ்சிதா உள்பட ஏராளமான நடிகர், நடிகைகளை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர். கிராமம் மற்றும் கிராமத்து மண் சார்ந்த மனிதர்களும், அழுத்தமான நடிப்பும், பாரதிராஜா இயக்கிய திரைப்படைப்புகளின் தனி முத்திரைகள். திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக, இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி ஒன்றிய அரசு அவரை கவுரவித்தது. மேலும், 6 முறை தேசிய விருதுகள், 3 முறை தமிழ்நாடு மாநில அரசு விருதுகள், பிலிம்பேர் விருது, தமிழ்நாடு அரசு வழங்கிய கலைமாமணி விருது உள்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.
இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் ஜனனி உள்ளனர். மகன் மனோஜ் பாரதி, தாஜ்மஹால், அல்லி அர்ஜூனா, சமுத்திரம், அன்னக்கொடி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்ததார். மார்கழி திங்கள் உள்ளிட்ட சில படங்கள் இயக்கியும் இருந்தார். இவர் கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி மாரடைப்பால் இறந்தார். ஏற்கனவே வயது மூப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பாரதிராஜாவுக்கு, மகன் இறப்புக்கு பிறகு மேலும் உடல் நலம் குன்றியது. சில மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் வீடு திரும்பினார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த பாரதிராஜாவின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், சிவக்குமார், சூர்யா, கவுண்டமணி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பாரதிராஜா மறைவையொட்டி இன்று தமிழ் சினிமா படப்பிடிப்புகள், தொலைக்காட்சி படப்பிடிப்புகள், பிற சினிமா பணிகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நிறுத்தப்படும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி அமைப்பு கூட்டாக அறிவித்துள்ளன. பாரதிராஜா மறைவால் அவரது சொந்த ஊரான தேனி அல்லிநகர மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அல்லிநகரம் மக்கள் கூறுகையில், ‘‘அல்லிநகரம் என்ற பெயர் இன்றைக்கு அமெரிக்காவில் வசிக்கக் கூடியவர்களுக்கு கூட தெரியும் அளவிற்கு வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பெருமை பாரதிராஜாவை சேரும்’’ என்றனர்.
* முழு அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் உடல் அடக்கம்
இயக்குனர் பாரதிராஜாவின் உடல் நேற்று இரவு, அவரது சொந்த ஊரான வத்தலகுண்டு அருகே உள்ள காட்ரோட் தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல், இன்று மதியம் 3 மணிக்கு அங்கேயே அடக்கம் செய்யப்பட உள்ளதாக பாரதிராஜா குடும்பத்தார் தெரிவித்தனர். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
* கிராமம் மற்றும் கிராமத்து மண் சார்ந்த மனிதர்களும், அழுத்தமான நடிப்பும், பாரதிராஜா இயக்கிய திரைப்படைப்புகளின் தனி முத்திரைகள்.
* திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக, இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி ஒன்றிய அரசு அவரை கவுரவித்தது.
* 6 முறை தேசிய விருதுகள், 3 முறை தமிழ்நாடு மாநில அரசு விருதுகள், பிலிம்பேர் விருது, தமிழ்நாடு அரசு வழங்கிய கலைமாமணி விருது உள்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.
