தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் தேர்தல் பணிகளை தொடங்க தேர்தல் ஆணையம் உத்தரவு: தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு திருச்சி (கிழக்கு), பெருந்துறை, மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி), அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த முதல்வர் விஜய், அந்தத் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அத்தொகுதி காலியானது.

மேலும், அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெருந்துறை தொகுதி உறுப்பினர் ஜெயகுமார், மதுராந்தகம் தொகுதி உறுப்பினர் மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி உறுப்பினர் சத்தியபாமா மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி உறுப்பினர் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிகளும் காலியாக அறிவிக்கப்பட்டன. சட்டப்படி, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதன் அடிப்படையில், இந்த 5 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், தேர்தல் நடத்துவதற்கான நிர்வாக ஏற்பாடுகளை வரும் 22ம் தேதிக்குள் நிறைவு செய்யுமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இடைத்தேர்தல் நடைபெற உள்ள 5 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இடைத்தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: