மதுரை: காவல் துறைக்கு குற்றங்களை விசாரிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதே தவிர, யாரையும் சித்ரவதை செய்ய உரிமை இல்லை என மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞரை போலீசார் ஒரு வழக்கில் கைது செய்தனர். அப்போது, அவர் தப்ப முயன்றதில் பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார். ஆனால் போலீசார் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மானாமதுரை – ராமேஸ்வரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘காவல் மரணம் என்பதால் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். எஸ்சி – எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிபிசிஐடி விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும்’’ என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் மாஜிஸ்திரேட்டின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, டிஎஸ்பி விசாரிக்கிறார். சிசிடிவி காட்சிகள் மற்றும் மருத்துவமனை, காவல் நிலைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிபிசிஐடி விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு தகுந்த சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, விசாரணையை விரைந்து முடித்து, நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். காவல் துறைக்கு குற்றங்களை விசாரிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதே தவிர, யாரையும் சித்ரவதை செய்ய உரிமை இல்லை. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21 வழங்கும் வாழும் உரிமை மற்றும் மனித கண்ணியம் என்பது காவல் நிலைய வாசலோடு முடிந்து விடுவதில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.
