சென்னை: பத்தாம் வகுப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் ஒருநாள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. இதில் 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதனை தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வராத, தோல்வி அடைந்த மாணவ, மாணவிகளுக்கான துணைத்தேர்வு ஜூலை மாதம் 8ம் தேதி முதல் 15 வரை நடைபெற உள்ளது.
துணை தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித் தேர்வர்கள் அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பித்து வந்தனர். விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக சிறப்பு அனுமதி திட்டத்தில் ஜூன் 9, 10 ஆகிய தேதிகள் வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தேர்வர்களின் நலன் கருதி மேலும் ஒருநாள் (இன்று) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
