திருவையாறு, பஞ்சநதீஸ்வரர்

திருவையாறு திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பஞ்சநதீஸ்வரர் என்ற ஐயாறப்பர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற முக்கியமான திருத்தலம் மட்டுமின்றி பல அதிசயங்கள் நிறைந்த திருத்தலமாகும். ஐந்து நதிகள் சங்கமம் ஆவதால் திருவையாறு என்று அழைக்கப்படுகிறது. ஐந்து நதிகள் பாய்ந்தோடுவதை பஞ்சாப் என்றழைக்கிறோம். அதைவிட மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும்.
சிலாத மகிரிஷி யாகபூமியை உழுத பொழுது ஒரு பெட்டகத்தில் நந்திதேவர் குழந்தையாக கிடைத்த திருத்தலம். அவருக்கு ஆயுள் குறைவு என்று தெரிந்ததும் திருவையாற்றில் ஒற்றைக்காலில் தவம் புரிந்தார். பின் திருமழபாடியில் சுயசாம்பிகை என்ற கன்னிகையை நந்தி தேவருக்கு சிவபெருமானே மணம் முடித்து வைத்தார்.
திருநாவுக்கரசர் (அப்பர்) காடு, மலை கடந்து கை, கால்கள் தேய்ந்த நிலையில் கயிலை நோக்கி பயணித்தார். அவரின் பக்தியை கண்ட சிவபெருமான் வயதானவராக மாறுவேடத்தில் தோன்றி பஞ்சநதியில் நீராடி வடக்கு நோக்கி வணங்கி வேண்டவே, கைலாய காட்சியை அப்பர் கண்டார்.
தர்மசம்வர்த்தினி (அறம் வளர்த்த நாயகி) இங்குள்ள அம்மனின் திருநாமம். உலக உயிர்கள் உயிர் வாழவே சிவபெருமான் கொடுத்த இரண்டு நாழி நெல்லை கொண்டு முப்பத்திரண்டு அறங்களை (தர்மங்களை) செய்ததால் அன்னையின் இந்த திருநாமம் வந்தது.
எல்லா திருத்தலங்களிலும் சண்டிகேஸ்வரர் வடக்கு நோக்கி அமர்ந்திருப்பார். இத்திருத்தலத்தில் தெற்கு நோக்கி தவம் புரியும் சண்டிகேஸ்வரர் சிறப்பானதாக உள்ளது.
மரண பயம் நீக்கும் ஆட்கொண்டார் (காலசம்ஹார மூர்த்தி) சந்நதி உள்ளது. இவர் தெற்கு நோக்கி தவக்கோலத்தில் அமர்ந்துள்ளார். இவருக்கு குங்குமப்பூ காப்பு இட்டு வழிபடுவது சிறப்பான வழிபாடாக உள்ளது. எம பயம் நீக்கி நன்மை செய்பவராக உள்ளார்.
இது இசைத் தலமும் கூட கர்நாடக சங்கீத மூம்முர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் முக்தி பெற்ற திருத்தலம் இதுவே. ஆண்டு தோறும் தியாகராஜ ஆராதனைப் பெருவிழா தொடர்கிறது.
ஐந்தாறுகள் போலவே இந்த ஸ்தலம் தர்மம், இசை, பக்தி மற்றும் இயற்கையின் ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் புண்ணிய பூமி ஆகும். காசியை விட அதிக புண்ணியங்கள் மிகுந்த தலமாகும்.
இங்குள்ள தெய்வத்திற்கு ராகு – கேது ஆகிய சாய கிரகங்களைத் தவிர அனைத்து கிரகங்களும் இந்த ஸ்தலத்தில் உள்ள தெய்வங்களுக்கு நாமாகரணம் செய்துள்ளது.
*பௌர்ணமி நாளில் பஞ்ச நதியில் நீராடி வடக்கு நோக்கி வழிபட்டு செந்தாமரை மலர் கொண்டு சுவாமியையும் அம்பாளையும் வழிபட வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
*மிதுன லக்னக்காரர்கள் அவர்களின் ெஜன்ம நட்சத்திரத்திற்கு இரண்டாவது நட்சத்திர நாளில் கடுகு எண்ணெயால் தீபம் ஏற்றி இந்த திருத்தலத்தில் வழிபட்டால் கடன் சுமைகள் குறையும், செல்வ வளம் அதிகரிக்கும்.
*லக்னத்திற்கு இரண்டாம் பாவகத்தில் சந்திரன் உள்ளவர்கள், தங்களது ஜென்ம நட்சத்திரத்திற்கு ஆறாவது நட்சத்திரத்தன்று சுவாமிக்கு பாலும் பன்னீரும் கொடுத்து, நல்லெண்ணெயில் தீபம் ஏற்றி வழிபட்டு பின் தயிர் சாதத்தை கருப்பு நிற பசுவிற்கு கொடுத்து வந்தால், குபேர சம்பத்து உண்டாகும்.
*லக்னத்திற்கு எட்டில் (8ல்) பன்னிரெண்டில்(12ல்) சனி அல்லது செவ்வாய் இருந்தால் ஐந்து நதி சங்கமத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்து கருப்பு நிற பசுவிற்கு உணவு கொடுத்தால், எப்படிப்பட்ட பிணியும் விலகிப் போகும்.
*பௌர்ணமி நாளில் மஹாவில்வத்தை இந்த திருத்தலத்தில் நட்டு பராமரித்து வளர்த்தால் எப்படிப்பட்ட கர்மாவும் விலகும், செல்வ செழிப்போடு வாழ்வார்கள்.

Related Stories: