பாரததேசம் மட்டும் அல்லாமல், உலக அளவிலும் பெரும் புகழ் பெற்றவர் காளிதாசர். நூல்கள் பல இயற்றியவர். அவற்றில் ஒவ்வோர் இடத்தையும் அவர் வர்ணிக்கும் பொழுது அதைப் படிப்பவர்களின் மனத்தை இழுத்து, அந்த இடங்களில் கொண்டு போய் நிறுத்திவிடுவார். அந்த இடத்தை அவர் விவரிக்கும்போது, அந்தச் சுற்றுப்புறச் சூழ்நிலை, அந்த இடத்தினுடைய தன்மை, குளிர் – காற்று முதலான சீதோஷ்ணத் தன்மைகள் எனும் அனைத்தையும் நாமே அனுபவிப்பது போல அற்புதமாக வர்ணித்திருப்பார். சொல்லாற்றல், நடையழகு, உவமானம் ஆகியவற்றிலும் தலை சிறந்தவர் காளிதாசர். அயல்நாட்டுப் பெரும் கவிஞர்களும், காளிதாசருடைய நூல்களை வியந்து பாராட்டி இருக்கிறார்கள்.
“இதேபோல நாமும் செய்ய வேண்டும்’’ என்று முயற்சி செய்த அயல் நாட்டுக்காரர்களும் உண்டு. இவ்வாறு உலகெங்கும் புகழ்பெற்ற காளிதாசரைப் பற்றிய வரலாறு இதோ உங்கள் முன்னால்…
மகிஷபுரி எனும் நகரின் அரசர் மாகேந்திரன். அவர் மனைவி அன்னபூரணி. அந்த ராஜ தம்பதிகளுக்கு `வித்யாகுரோசம்’ எனும் பெயரில், ஒரு மகள் இருந்தாள். அவள் சிறுவயதில் இருந்தே கல்வி கேள்விகளில் மிகுந்த ஆர்வம் கொண்டு தேர்ச்சி பெற்றவள். அவளுக்குத் திருமணப் பருவம் வந்தது. தந்தை பார்த்தார்; “அம்மா! உனக்கு நல்ல முறையில் திருமணம் செய்துவைக்க வேண்டும். அதற்குச் சுயம்வரம் ஏற்பாடு செய்யலாம் என்று தீர்மானித்து இருக்கிறேன்.
அதை இப்போது உன்னிடம் சொல்லி விட்டேன்’’ என்றார். அதைக் கேட்ட மகளோ,“அப்பா! ஏதோ சுயம்வரம்! ஏராளமான இளவரசர்கள் வருவார்கள். அதில் ஒருவரை நான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்பது உங்கள் எண்ணம். என்னைப் பொறுத்தவரை, வரக்கூடியவர் என் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றவராக இருக்க வேண்டும். என்னைக் கல்வி – கேள்விகளில் வெல்பவர் யாரோ, அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன். வேண்டுமானால் அதற்கு உண்டான ஏற்பாட்டைச் செய்யுங்கள்!’’ என்றாள்.
அரசர் திகைத்துப் போனாலும், தந்தை என்ற முறையில், “ஆகா! என் மகள் எவ்வளவு பெரிய அறிவாளி! எவ்வளவு படித்திருக்கிறாள்! கல்வி கேள்விகளில் தலைசிறந்தவனையே மணப்பேன் என்கிறாளே!’’ என்று பெருமிதப்பட்டாலும், அவருக்கு வேறோர் எண்ணமும் தோன்றியது; “அம்மா! அவர்கள் வெற்றி பெற்றால் அவர்களுக்கு நீ மணமாலை அணிவிக்கலாம். உன்னை வெல்லக் கூடியவர்கள் யாருமில்லை என்றால் என்ன செய்வது?’’ எனக் கேட்டார்.
“நம் நாட்டில் கண்டிப்பாக இருப்பார்கள் அப்பா! கவலைப் படாதீர்கள்! ஒருவேளை நீங்கள் நினைப்பது போல ஆனால், இப்போது இருப்பதைப் போலத் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்து விடுகின்றேன்’’ என்று தீர்மானமாகச் சொன்னாள். மன்னரும் வேறு வழி இல்லாமல் ஒப்புக்கொண்டார். மந்திரியை அழைத்து, “இளவரசியை கல்வி கேள்விகளில் வெல்லக்கூடியவர் யாரோ, அவரைத்தான் இளவரசி திருமணம் செய்து கொள்வாள் என்று முரசு அடித்து, நம் நாடு எங்கும் அறிவித்து விடுங்கள்!’’ என்றார்.
மந்திரியும் அவ்வாறே செய்தார். குறிப்பிட்ட நாளன்று புலவர்களும் கல்விமான்களும் வந்து குழுமினார்கள். இவர்களுடன்கூட,“அரசர், இளவரசி, அரசி எனும் அவ்வளவு பேர்களையும் ஒன்றாகப் பார்க்க, இது ஒரு சந்தர்ப்பமாக இருக்கட்டும்’’ என்ற எண்ணத்தில் பலர் வந்தார்கள். குறிப்பிட்ட நாளில் அரண்மனையை நன்றாக அலங்கரித்து வைத்திருந்தார்கள். அனைவரும் வந்து அமர்ந்தவுடன் இளவரசியும் வந்து அமர்ந்தாள். போட்டி துவங்கியது. வந்திருந்தவர் களில் ஒருவர்கூட தேறவில்லை; தோற்றுப் போய்த் திரும்பினார்கள்.
அன்று சபை கலைந்தவுடன் மந்திரி, இந்தத் தகவல்களை வெளியூர்களுக்கும் வெளி நாடுகளுக்கும் அறிவித்தார். இளவரசியின் போட்டிக்காக வெளி நாடுகளில் இருந்தெல்லாம் பலர் வந்து கலந்து கொண்டார்கள். அதிலும் ஒருவர் கூடத் தேறவில்லை. அரசகுமாரியிடம் கல்விப் போட்டியில் தோற்றுப்போன வித்வான்களும் புலவர்களும் கல்விமான்களும் தலைகுனிந்து திரும்பினார்கள். ஆனால் அவர்களில் ஒருசிலர் சேர்ந்து, ஒரு திட்டம் தீட்டினார்கள்;“நம் அவ்வளவு பேர்களையும் அவையில் பொதுப்படையாக அவமானப்படுத்திய இந்த இளவரசிக்கும் அரசருக்கும், அதேபோல் நாமும் ஏதாவது செய்து பழிதீர்த்துக் கொள்ள வேண்டும்’’ என்று தீர்மானித்தார்கள்.
(ஒரே ஒரு நூல் மட்டும், திட்டத்தை வகுத்துக் கொடுத்தது அரசரின் அமைச்சரான ஆத்ம ரட்சகன் என்று சொல்கின்றது. காரணம், “இளவரசி கல்யாணம் ஆகாமல் இருந்து கொண்டிருக்கிறார். இப்படியே போனால் இதற்கு முடிவுதான் என்ன எதையாவது செய்து, இதற்கு ஒரு முடிவு ஏற்படுத்த வேண்டும். இளவரசிக்குத் திருமணம் நடக்க வேண்டும்’’ என்ற நல்ல எண்ணத்தில், போட்டியில் தோற்றுப்போன புலவர்கள் சிலரை அழைத்து, “நீங்கள் எதையாவது செய்து இளவரசியை வெற்றிகொள்ளும் படியான ஒரு திட்டத்தைத் தீட்டுங்கள்!’’ என்றார்.
அவர் நல்ல எண்ணத்தில்தான் அவ்வாறு செய்தார் என்கிறது) இளவரசியையும் மன்னரையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், புலவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். வரும் வழியில், மரத்தில் இருந்த படிதழைகளை வெட்டிக் கொண்டிருந்தான் ஒருவன். மரத்தின் மேல் அவன் இருந்தது நுனிப்பகுதி; வெட்டிக் கொண்டிருந்ததோ அடிப்பகுதி. வந்த புலவர்கள் எல்லாம் சற்று ஓய்வு எடுக்கலாம் என்று மரத்தின் அடியில் அமர்ந்தவர்கள், அந்த இளைஞனைப்பார்க்க, இளைஞன் நன்றாக அழகு களை மிகுந்தவனாக இருந்தான். அழகு சொட்டும்படியாக இருந்த அவனைப் பார்த்தவுடன் புலவர்களுக்கு ஓர் எண்ணம் தோன்றியது.
“இவனையே எதையாவது சொல்லி அழைத்துக்கொண்டு போய், இளவரசிக்கு மணம் முடித்தால் என்ன?’’ என்ற எண்ணம் தோன்றியது. உடனடியாக அவனை மரத்திலிருந்து இறங்கி வரச்செய்து, “அப்பா! யார் நீ? உன் பேர் என்ன?’’ என்று கேட்டார்கள். பொறுப்பாகப் பொறுமையாகப் சொன்னான் அவன்; “இந்த ஊரில் அனந்த நாராயணன் என்று ஒரு வேதியர் இருக்கிறார்; கல்வி கேள்விகளில் தலைசிறந்தவர்; வேதங் களில் கரைகண்ட வேத விற்பன்னரான அந்த அனந்த நாராயணனின் பிள்ளைதான் நான். என் பெயர் ஹரிஹரன்’’ என்றான்.“சரி! நீ ஏன் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கின்றாய்?’’ எனக் கேட்க, ஹரிஹரன் உண்மையைச் சொன்னான்;“என்னவோ தெரிய வில்லை. மந்திரம் எதுவும் மனதில் பதியவில்லை. நானும் அன்று முதல் இப்படி ஆடுகளை மேய்த்துக் கொண்டு வருகிறேன்’’ என்றான்.
புரிந்து கொண்டார்கள் புலவர்கள்;“இவன் அழகொழுகக் களை நிறைந்தவனாக இருக்கின்றானே தவிர, இவனிடம் கலை என்பது இல்லை. நுனிக்கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்டக்கூடிய முழு மூடனாக இருக்கிறான். எப்படியாவது இவனைச் சம்மதிக்கச் செய்து, இளவரசிக்கு மணம் முடித்துவிட வேண்டும்’’ என்று தங்களுக்குள் தீர்மானித்துக்கொண்டார்கள். தங்கள் தீர்மானத்தை,“ஹரிஹரா! நீ நன்றாக இருப்பாய். நாங்கள் சொல்வதைக் கேள்! அது போதும்.
நாங்கள் உன்னை நன்றாக அலங்கரித்து, ஒரு பல்லக்கில் உன்னை உட்காரவைத்துச் சுமந்து கொண்டு போகின்றோம், மகிஷபுரி அரசுக்கு. இளவரசி கேட்கும் கேள்விகளுக்குப் பதில்சொல்ல வேண்டும். போட்டியில் அவளை வெற்றி கொள்பவர்களைத்தான் அவள் மணப்பாள். ஆகவே நீ எங்களுடன் வந்தால், எல்லாவிதமான சுகங்களும் வசதிகளும் கிடைக்கும்; இல்லாவிட்டால் துன்பப்படுவாய்’’ என்று சற்று உரத்த குரலிலேயே மிரட்டினார்கள். ஹரிஹரன் பார்த்தான்;“என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்!’’ என்றான்.
“நீ வாய் திறந்து எதுவும் பேசி விடக்கூடாது. மௌனமாகவே இருக்க வேண்டும்’’ என்றார்கள் புலவர்கள். ஹரிஹரன் சம்மதித்தான். உடனே அவனுக்கு விலை உயர்ந்த ஆடை – ஆபரணங்களைப் பூட்டிப் பெருமளவில் அலங்காரங்கள் செய்து, ஓர் பல்லக்கில் அமர்த்தி, புலவர்கள் எல்லாம் சுமந்து கொண்டு மகிஷபுரிக்குச் சென்றார்கள். அங்கே அரண்மனை வாயிலில் பல்லக்கை இறக்கி வைத்து விட்டு, எல்லோரும் சென்று, அரசரிடம் தகவல் சொன்னார்கள்.
“பல்லக்கில் ஒரு மாபெரும் பண்டிதர் வந்திருக்கிறாராம். இவ்வளவு பேர்கள் அவருக்குப் பல்லக்கு சுமந்து வந்திருக்கிறார்கள் என்றால், அவர் பெரும் கல்விமானாகத்தான் இருக்க வேண்டும். வரக்கூடிய எவராவது நம் மகளை வென்று, அவள் கையால் மாலைபெற வேண்டும். நம் மகளுக்கு நல்ல விதமாகத் திருமணம் நடக்க வேண்டும்’’ என்று வேண்டினார் மன்னர்; புலவரை உள்ளே அழைத்துவர அனுமதி கொடுத்தார். பல்லக்கில் இருந்து புலவரை அழைத்துக்கொண்டு வருகிறார்கள்.
அதாவது ஹரிஹரனை! உள்ளே வரும்பொழுது ஹரிஹரனுடைய கம்பீரம், நடையழகு, அழகு சொட்டும் முகம், ஆடை ஆபரணங்கள் என எல்லாம் சேர்ந்து மிகவும் அழகாக, அவ்வளவு கம்பீரமாக நடந்து வந்தான். அதே சமயம், அந்தப் புலவர்கள் எல்லாம் சேர்ந்து அரசரிடமும் அமைச்சரிடமும்,“வரக்கூடியவர் பெரும் பண்டிதர்; பல இடங்களிலும் சுற்றித்திரிந்து பலரை வென்றிருக்கிறார். இப்பொழுது மௌனம் கடைப்பிடிக்கிறார். அதனால் உங்கள் இளவரசி என்ன கேட்டாலும் சரி! அதற்கு இவர் சமிக்ஞையால் – குறிப்பால் உணர்த்துவார். இளவரசிக்கு விளக்கம் புரிந்தால் சரி! இல்லாவிட்டால் நாங்கள் விளக்குவோம்’’ என்றார்கள். இளவரசி ஒப்புக்கொண்டாள். போட்டி தொடங்கியது. ஏராளமானோர் கூடியிருந்தார்கள். இளவரசி கேள்வி
கேட்கத் தொடங்கினாள்.
ஹரிஹரனும் ஏற்கனவே அந்தப் புலவர்கள் சொன்னபடி – தான் ஒப்புக்கொண்ட படிகைவிரல்களை நீட்டியும் மடக்கியும் ஏதோ குறிப்பு காட்டி வந்தான். இதில் ஒரு சில கேள்விகளுக்கு இளவரசி, தானே ஏதோ புரிந்துகொண்டாள். இளவரசி புரியாமல் தவிக்கும்போது, ஹரிஹரனை அழைத்துக்கொண்டு போன புலவர்கள் விளக்கம் சொன்னார்கள். இளவரசி தோற்றுப் போனாள்; தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டாள். ஒரு நல்ல நாளில் இளவரசிக்கும் ஹரிஹரனுக்கும் நல்லமுறையில் திருமணம் நடந்தது.
ஊரே கூடி மகிழ்ந்தார்கள். திருமணம் நடந்து முடிந்த உடனே, ஹரிஹரனை அழைத்துக் கொண்டு வந்த புலவர்கள் அனைவரும், அரசர் – அமைச்சர் – இளவரசி ஆகியோரிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு அங்கிருந்து விலகிச் சென்றார்கள். புதுமணத் தம்பதிகள் தனியாக உறங்கும் அறை, நல்ல முறையில் அற்புதமாக நறுமணம் கமழும் மலர்கள் தூவி, அலங்கரிக்கப்பட்டது. பணிப்பெண்கள் எல்லாம் செய்து முடித்தார்கள். இரவு நெருங்கியது. முன் இரவு காலம். ஹரிஹரன் அங்கே அறைக்குள் நுழைந்தான்.
அறைக்குள் இருந்ததை எல்லாம் பார்த்தவன் வியந்தான். அதையெல்லாம் அவன் பார்த்ததில்லை. அங்கிருந்த அலங்காரங்கள், விலை உயர்ந்த ஆபரணங்கள், ஆடைகள் ஒருபுறம்! அதைவிட அற்புதமாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப் படுக்கை; அங்கு உண்பதற்காக வைக்கப்பட்டிருந்த உணவு வகைகள் என அனைத்தையும் பார்த்த ஹரிஹரன் ஆச்சரியப்பட்டான்.
“அந்தப் புலவர்கள் சொன்னது உண்மைதான். எவ்வளவு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்’’ என்ற மகிழ்ச்சியில் சற்று நேரம் எதையோ தின்ற ஹரிஹரன், அப்படியே களைத்துப்போய் அங்கே ஒரு பக்கமாகச் சாய்ந்து தூங்கினான். அந்த அறைக்குள் இளவரசி நுழைந்தாள்; தன்னை மறந்த நிலையில் தூங்கிக் கொண்டிருந்த ஹரிஹரனைக் குரல் கொடுத்து எழுப்பினாள். அவன் எழுந்திருக்கவில்லை; அருகில் இருந்த பன்னீரை, ஹரிஹரனின் முகத்தில் கொஞ்சமாக அடித்தாள்.
ஆடு மேய்க்கும் நினைவுகளில் இருந்த ஹரிஹரன், “ஏதோ ஆடு வந்து நமக்குத் தொல்லை கொடுக்கிறது போலும்’’ என நினைத்து விரட்டினான். இளவரசிக்கு ஒன்றும் புரிய வில்லை; ஒரு வழியாக ஹரிஹரனை எழுப்பினாள்; விவரம் கேட்டாள். ஹரிஹரன் உண்மையைச் சொல்லி விட்டான்;“அம்மா! அனந்த நாராயணன் என்று சொல்லக்கூடிய வேத வல்லுநர் ஒருவர் இருக்கிறார். அவருடைய மகன் நான். என் பெயர் ஹரிஹரன். வீட்டில் இருக்கக்கூடிய ஆடுகளை மேய்க்கும் வேலையைச் செய்து வந்தேன். அப்போதுதான் இந்தப் புலவர்கள், நீ எதுவும் பேச வேண்டாம். வாயை மூடிக்கொண்டு, நாங்கள் சொன்னபடி கேட்டு அமைதியாக நடந்து கொண்டால், உனக்கு ராஜபோகம் கிடைக்கும். நாங்கள் சொன்னபடி கேட்காவிட்டால், உனக்கு ஆபத்துதான் என்று மிரட்டினார்கள்.
விவரம் புரியாத நானும் ஒப்புக் கொண்டேன். அதற்கு மேல் நடந்தது, உங்களுக்கே தெரியுமே!’’ என்றான் ஹரிஹரன். இளவரசி கொதித்தாள்; உடனடியாக ஹரிஹரனிடம் சீறினாள்;
“இனிமேல் நீங்கள் இங்கே அரண்மனையில் இருக்கக்கூடாது. நீங்கள் வெளியில் போய் விடுங்கள்! எல்லையில் ஒரு காளி கோயில் உள்ளது அந்தக் காளி தேவியின் அருள்பெற்று திரும்புங்கள். அதுவரை இந்த நாட்டின் எல்லையிலேயே நீங்கள் நுழையக்கூடாது’’ என்றாள். ஹரிஹரன் பார்த்தான்;“நல்ல வேளை! தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது.
ஏன் அந்தப் புலவர்கள் இவ்வாறு செய்தார்கள்? ம்!… நடந்து போனதைப்பற்றி எண்ணி, பிரயோஜனம் இல்லை. இவ்வளவு ஏன்? ஏதோ, நானே தீர்மானம் செய்து இவ்வளவு ஏமாற்றிவிட்டதாக, அரசகுமாரி என்னிடம் கொதிக்கிறாளே! தகப்பனார் வேறு ஏசுகிறார்’’ என்று விரக்தி நிலையில் இருந்தவன், தீவிரமான மனோபாவத்துடன், அம்பிகையை நேருக்கு நேராகத் தரிசிப்பதற்காக அங்கிருந்து கிளம்பினான்; அம்பிகையின் அருள் பெற்றுத் திரும்பினான். இவன் திரும்பியவுடன், வந்துவிட்டான் என்பதை அறிந்த இளவரசி, மிகவும் கோபமாக வந்து,“நான் சொன்னபடி போய்க் காளியின் அருள் பெற்றுக் கொண்டு, அப்படியே காளிதாசராகத் திரும்பிவிட்டீர்களாக்கும்’’ என்று கத்தினாள்.
காளிதாசரோ… இளவரசியின் கால்களில் விழுந்தார். ஆமாம்! இனிமேல் அவர் ஹரிஹரன் இல்லை, `காளிதாசர்’ காளியினுடைய அருளை முழுமையாகப் பெற்றார் என்று, இந்தப் பெயரைச் சூட்டியது அந்த இளவரசிதான். விழுந்து வணங்கி எழுந்தார், காளிதாசர். இளவரசி கேட்கக் காளிதாசர் நடந்ததைக் கூறினார்; “அம்மா! நீங்கள் சொன்னபடி காளி கோயிலுக்குப் போனேன்; வேண்டினேன். காளி அருள் புரிந்தாள். நல்வழி காட்டிய நீங்கள் இன்று முதல் என் குரு’’ என்றார்.
இளவரசி படித்தவள் அல்லவா புரிந்து கொண்டாள்; “உங்களை இனிமேல் என் கணவராக நினைப்பது பெரும் தவறு. இனிமேல் நீங்கள் உங்கள் விருப்பப்படி காளிதாசர் என்ற பெயருடன் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்’’ என்றாள். காளிதாசர் மறுபடியும் கையெடுத்துக் கும்பிட்டு, அடங்கிய நிலையில் அங்கிருந்து புறப்பட்டார். போனவர் பற்பல தேசங்களுக்கும் சென்றார்; அந்த நிலையில்தான் போஜமன்னரின் அரண்மனைக்குச் சென்றார்.
(அடுத்த இதழில்…)
பி.என்.பரசுராமன்
