8.6.2026 திங்கட்கிழமை – அதிக பகவதா அஷ்டமி
அதிக பகவதாஷ்டமி’ என்பது ஆன்மிகத்தில் கடன் சுமை மற்றும் பண நெருக்கடிகளைத் தீர்க்கும் ஆற்றல் வாய்ந்ததாகக் கருதப்படும் ஒரு விசேஷ அஷ்டமி திதியாகும். ஜோதிட ரீதியாக, திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமைகளில் வரும் தேய்பிறை அஷ்டமி நாட்கள் ‘பகவதாஷ்டமி’ என்று அழைக்கப்படுகின்றன. அனைத்து அஷ்டமி திதிகளும் கால பைரவருக்கு மிகவும் உகந்தவையாகும். மாலை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி அல்லது ரோஜா மலர் மாலை, வடை மாலை சாற்றி வழிபடலாம். மேலும், நெய் தீபம் அல்லது மிளகு தீபம் ஏற்றி வழிபடுவது கடன் தொல்லையை நீக்கும்.
உங்கள் ஊருக்கு அருகேயுள்ள பைரவர் கோயிலுக்குச் செல்லுங்கள். சிவாலயங்களிலுள்ள பைரவர் சந்நதியை வணங்கி வாருங்கள். இந்த நாளிலே மூலவராகவே உள்ள தகட்டூர் காசி பைரவர் குறித்து பார்ப்போம் வாருங்கள். இந்தியாவிலேயே அபூர்வமாக மிகச் சில இடங்களில்தான் பைரவருக்கென்று தனிக் கோயில் உள்ளது. அப்படிப்பட்ட அபூர்வம் வேதாரண்யத்திற்கு 17 கி.மீ. தொலைவிலுள்ள தகட்டூரில் நிகழ்ந்திருக்கிறது. இப்புண்ணிய பூமியான தகட்டூரில் பைரவர் அமர்ந்தது, தனிச் சுவாரசியம் கொண்ட புராண உண்மை. சத்திய சந்தனாக வாழ்ந்த ஸ்ரீராமனின் சரிதத்தோடு தொடர்புடையது.
அந்த ஷேத்ரத்திற்கு யந்திரபுரி என்று பெயர். அழகிய தமிழில் தகடூர் (தகடு+ஊர்) என்றழைப்பர். பிரபஞ்ச சக்திகளை, இறைச்சாந்நித்தியத்தை யந்திரத்தில் கணக்கிட்டு, கோடுகளாக வரைந்து மந்திரசக்திகளை அதில் பொதித்து வைத்திருப்பர். அனுதினமும் அதை பூஜிக்க அதன் சாந்நித்தியமே அப்பிரதேசத்தையே காக்கும் வலிமையுடையதாக மாற்றுவர். விஞ்ஞானமும், மெய்ஞானமும் சரிவிகிதத்தில் கலக்கச் செய்யும் மாபெரும் ரசவாதம் அது.
இதற்கென்றே தம் வாழ்நாளையே அர்ப்பணித்துக் தகட்டூரில் கிடந்தனர் ஆன்றோர்கள். அதனாலேயே யந்திரம் அதாவது தகடுகள் செய்த ஊராதலால் தகடூர் என்றழைக்கப்பட்டு, தகட்டூர் என்று நிரந்தரமாக மாறியது. யந்திரத்தின் ஆளுகைக்கு உட்பட்ட கிராமமாக விளங்கியது. இந்த ஷேத்ரத்திற்கு ஸ்ரீ ராமர் ஏற்றம் கொடுக்க எண்ணினார். ஆஞ்சநேயரைக் கொண்டு சிறு லீலை நிகழ்த்தினார்.
ராவணனை சம்ஹாரம் செய்து விட்டு சிவபூஜை செய்வதற்காக காத்திருந்தார் ஸ்ரீராமர். அஞ்சனை மைந்தன் அனுமனை நோக்கினார். பணிவோடு பாதம் பற்றி யான் என்ன செய்ய வேண்டும் பிரபு என்றார். ஆஞ்சநேயர். சிவாம்சத்தையே உமக்குள் கொண்ட நீ உன் கைகளால் காசியிலிருந்து லிங்கம் கொண்டு வாயேன். ராமப்பிரபுவின் இதயமறிந்த ஆஞ்சநேயர் சரி என்றார். சொல்லிமுடிக்கும் முன்பே வானைநோக்கிப் பறந்தார். சஞ்சீவி பர்வத்தைத் சுமந்தவன் இப்போது காசித்தலத்தை அடைந்தான். காசிலிங்கம் மட்டும் கேட்ட ஸ்ரீராமருக்கு சிவாலயத்தையே கைகளில் ஏந்திக் கொண்டான்.
அதிவேகமாக வந்தவனை யந்திரபுரியின் சாந்நித்யம் வசீகரித்தது. இங்கேயே கிடக்கலாமே என ஒரு கணம் உள்ளுக்குள் ஆசை கிளர்ந்தது. மெல்லிய உறக்கம்போல் சற்று அயர்ந்தார். பைரவரையும், காசிலிங்கமும் இங்கேயே இருக்கட்டுமே என்று நினைத்தார். காசியிலிருந்து கொண்டுவந்ததை ஆஞ்சநேயரே பிரதிஷ்டை செய்ததுபோல அந்த நிகழ்ச்சி அமைந்தது.
மெல்ல அவ்விடம்விட்டு அகன்றார். ஸ்ரீராமர், தம் மனம் புரிந்து ஆஞ்சநேயர் செய்ததை எண்ணி மகிழ்ந்தார். அத்தலம் ராமனின் பார்வையாலும், ஆஞ்சநேயரின் திருப்பாதம்பட்டும் மலர்ந்தது. மகாஷேத்ரங்களின் எண் திக்குகளிலும் அதற்குரிய தேவதைகளை பிரதிஷ்டை செய்திருப்பர். அந்த பெருந்தலத்தின் அருட்வீச்சு பரந்திருக்கும். சில தலங்களுக்கு அதன் எல்லை ஐம்பது, அறுபது கி.மீ. தூரம்வரை விரிந்திருக்கும். அந்த தலத்திற்கான காவல் தெய்வங்களையே தனிக்கோயிலாக மாற்றி அமைத்திருப்பார்கள். இந்த விஷயங்கள் சற்று சூட்சுமங்கள் நிறைந்தது. அப்படிப்பட்ட திருமறைக்காடு எனும் வேதாரண்யத்திற்கு காவலாக அல்லது ஷேத்ரபாலகராக அமைந்த தலமே தகட்டூர் என்கிறார்கள், சான்றோர்கள்.
தகட்டூர், சவுக்குக்காடுகளுக்கு மத்தியில் அமானுஷ்ய அமைதியாக விளங்குகிறது. வேதாரண்யத்தின் கடற்காற்று எப்போதும் அவ்விடத்தை குளிரூட்டிக் கொண்டிருக்கிறது. பரந்த மணற்பரப்பில் ஆங்காங்கு வீடுகள். தனிக்கோயிலாக தகட்டூர் பைரவர் கோயில் விளங்குகிறது. உள்ளே நுழைய நேரே வேறெங்கும் காணமுடியாத கருவறை மூர்த்தியாக, மூலஸ்தானத்திலேயே பைரவர் வீற்றிருக்கிறார். கைகளில் சூலம், கபாலம், கயிறு உடுக்கை தாங்கி, பாம்புகளை தன் மேனி முழுவதும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். திகம்பர மூர்த்தியாக காட்சி தரும் பைரவர் நாய் வாகனத்தை கொண்டுள்ளார். அந்த சந்நதியில் எப்போதும் ஒரு தகிப்பும், தணலும் நிறைந்திருக்கிறது.
பைரவரை வழிபடுவோர் பிணியிலா வாழ்க்கை வாழ்வர். தீயசக்திகளின் பாதிப்புடையோர் இத்தலத்தை அடைய தீயவை தூசாய் பறந்துபோகும். ஞானபீடமாகத் திகழும் இக்கோயிலில் சிவபஞ்சாட்சர யந்திரத்தை கருவறை வாயிலுக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் ஸ்தாபித்துள்ளனர்.
காசிலிங்கத்தையும், விசாலாட்சியையும் கோயிலின் வடபாகத்தில் நிறுவியுள்ளனர். பிராகாரத்தில் கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமியும் அருட்குடி கொண்டுள்ளனர். கோயிலுக்கு எதிரேயே தீர்த்தக்குளம் ஒன்றுள்ளது. காவல் தெய்வமாக இவர்கள் திகழுகிறார்கள். இங்கும் ஒரு யந்திர மேடை உள்ளது. தகட்டூர் காசிக்கு நிகரான பைரவத் தலம். ஒரு முறை தரிசித்தோரை பலமுறை அழைக்கும் அருட்திறன் வாய்ந்தது.
தஞ்சாவூரிலிருந்து, திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யம் செல்லும் வழியில் வாயுமேடு என்ற கிராமம் இருக்கிறது. இவ்வூரிலிருந்து பிரியும் சாலையில் 2 கி.மீ. சென்றால் தகட்டூரை அடையலாம்.
