அறுபத்து நான்கு கலைகளையும் அருள்பவள்

235. சதுஷ்ஷஷ்டி உபாசாராட்யா.
236. சதுஷ்ஷஷ்டி கலாமயீ.
237. மஹா சதுஷ்ஷஷ்டி கோடி யோகிநீ கணஸேவிதா.
எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு லலிதா சஹஸ்ரநாமத்தில் சில நாமங்கள் உண்டு. மேலேயுள்ள, மூன்று நாமங்களும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை சொல்கிறது.
சதுஷ்ஷஷ்டி உபாசாராட்யா அறுபத்து நான்கு உபசாரங்களால் ஆராதிக்கப்படுபவள். இதற்கு அடுத்ததாக, சதுஷ்ஷஷ்டி கலாமயீ… என்றால்
அறுபத்து நான்கு கலையினுடைய வடிவாக இருப்பவள்.
மூன்றாவதாக மஹா சதுஷ்ஷஷ்டி கோடி யோகிநீ கணஸேவிதா… என்றால் உயர்ந்த அறுபத்து நான்கு யோகிநீ கணங்களால் பூஜை பண்ணப்பட்டவள். ஆராதிக்கப்படுபவள்.
இந்த மூன்று நாமங்களிலும் சதுஷ் ஷஷ்டி என்கிற 64 எண்ணிக்கை வரும். பொதுவாகவே 64 என்கிற எண்ணிக்கைக்கு ஆன்மிக மரபில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக பூஜை, வழிபாடு, தியானம் எல்லாமே நம்முடைய சொரூபத்தை அறிந்து கொள்வதற்குத்தான். அதிலும் பூஜை, வழிபாடு எல்லாமே பக்தியை வளர்ப்பதற்குத்தான் மகான்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். பக்தியை வளர்க்க வேண்டுமெனில் அந்த பகவத் சொரூபத்தின் மீது நமக்கு அன்பு ஏற்பட வேண்டும். அன்பு இருந்தால் மட்டுமே நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியும். அந்த அன்பைத்தான் நாம் பக்தி என்று சொல்கிறேன்.
நமக்கு மிகவும் வேண்டியவர்கள், அன்புக்குரியவர்கள் வருகிறார்கள் எனில் அவர்களை எப்படியெல்லாம் வரவேற்போமோ அதற்குப் பெயர்தான் உபசாரம் என்பதாகும். முதலில் அவர்களை வரவேற்போம். ஒரு ஆசனம் அளிப்போம். சாப்பாடு அளிப்போம். குடிக்க நீர் கொடுப்போம். பேசுவோம்… என்று பல்வேறு உபசாரங்கள் செய்வோம்.
மனிதர்களுக்கே இப்படியெனில் பகவத் சொரூபத்தை எப்படி உபசாரம் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட நியதிகளெல்லாம் நமக்கு தெரியவில்லை என்பதற்காக மகான்களே நமக்கு அதை அளித்திருக்கிறாரகள்.
அடிப்படையாக பூஜையில் பஞ்சோபசார பூஜை என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். சந்தனம், குங்குமம் போன்ற கந்தத்தை சமர்ப்பணம் செய்வது. இது பஞ்ச பூதங்களில் நிலத்தை குறிப்பது. ஆகாசத்தை அடிப்படையாகக் கொண்ட புஷ்பத்தை சமர்ப்பணம் செய்வது. வாயுவை அடிப்படையாகக் கொண்ட தூபத்தை சமர்ப்பணம் செய்வது. அக்னியை அடிப்படையாகக் கொண்ட தீபத்தை சமர்ப்பணம் செய்வது. ஜலத்தை அடிப்படையாகக் கொண்ட நெய்வேத்தியத்தை சமர்ப்பணம் பண்ணுவது. இதுதான் பஞ்சோபசார பூஜை. இது மிகவும் அடிப்படையான பூஜை.
இதற்கு அடுத்து ஓரடி மேலே போனால், ஷோடச உபசார பூஜை என்று செய்வோம். பதினாறு விதமான உபாசாரம். இதில், பகவானை வரவேற்போம். தியானம் செய்வோம். ஆவாஹனம் செய்வோம். ஆசனம் கொடுப்போம். பகவானின் பாதத்தில் ஜலம் விடுவோம். பகவான் ஆசமனம் செய்வதற்கு நீர் அளிப்போம். அபிஷேகம், யக்ஞோபவீதம் (பூணூல்) , சந்தனம் புஷ்பத்தால் அர்ச்சிப்போம். தூப தீப நிவேதனங்களோடு அர்ச்சனை செய்து பிரார்த்திப்போம்.
மேலே உள்ளதைத்தான் ஒரு வரிசையில் பதினாறு விதமான உபசாரமாக சொல்கிறோம்.
இந்த ஐந்து உபசாரம், பதினாறு விதமான உபசாரம் என்பது வழிபாட்டில் இருக்கக் கூடியது.
ஆனால், லலிதையான அழகு அம்பாளுக்கு 64 விதமான உபசாரங்கள் செய்து பூஜை செய்வோம். அந்த அறுபத்து நான்கு விதமான உபசாரங்களால் அவள் பூஜிக்கப்படுவதால் அவளுக்கு சதுஷ்ஷஷ்டி உபசாராட்யா என்று பெயர்.
அடிப்படையாக வீட்டிலுள்ள பெண்களுக்குத்தான், தாய்மார்களுத்தான் நிறைய அலங்காரங்கள் இருக்கின்றன. இதை நாம் எல்லோருமே நன்கு அறிவோம். அதுபோலவே, இங்கு பரப் பிரம்மத்தை நாம் தாயாகவே நினைத்து உபசாரமும், பூஜையும் ஸ்ரீ வித்யாவில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏனெனில், அம்பாள் அண்ட சராசரங்களுக்கும் தாயாக இருக்கிறாள். எவ்வளவு விரிவாக பூஜித்தாலும் இந்த எண்ணிக்கையெல்லாம் போதுமா என்பது நமக்குத் தெரியாது.
அதனாலேயே மகான்கள் 64 உபசாரங்களையும் வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். இந்த 64லிலும் தனித்தனியாக மந்திரங்கள் வரும்.
முதலில் அம்பிகையை வரவேற்று, ஆசனம் அளித்து ஆவாஹனம் செய்கிறோம். இதற்குப் பிறகு அம்பாளின் பாதங்களை நீரால் அபிஷேகிக்கிறோம். இதற்கு பாத்யம் என்று பெயர். இதன் பிறகு கை அலம்புவதற்கு அர்க்கயம் அளிக்கிறோம். ஆசமநீயம் அளிக்கிறோம்.
இதெல்லாம் பொதுவானது. இதையெல்லாம் தாண்டி, அம்பாளை ஸ்நான வேதிகைக்கு (நீரால் அபிஷேகித்தல்) அழைத்துச் செல்லுதல் ஒரு உபசாரம். சுகந்த தைலம் என்று சொல்லக் கூடிய வாசனாதி தைலத்தை பூசி விடுவது ஒரு உபசாரம். அம்பிகையை மணி பீடத்தில் தங்கத்திலும் ரத்னத்திலும் ஆன ஆசனத்தில் அமர வைத்து தங்க குடத்திலுள்ள ஜலத்தால் அபிஷேகங்கள் செய்வது. அம்பாள் துவட்டிக் கொள்வதற்கு சுத்தமான ஒரு வஸ்திரத்தை சமர்ப்பித்தல். பிறகு அம்பாள் சாற்றிக் கொள்வதற்கு புதுப்புது வஸ்திரங்கள் எடுத்துக் கொடுத்தல். இதற்குப் பிறகு அம்பாளுக்கு நிறைய ஆபரணங்கள் உள்ளன.
நெற்றியில் போடுகின்ற நெட்டியில் தொடங்கி, காதில் குண்டலம், மூக்குத்தி, அம்பாளின் திருமாங்கல்யம், அட்டிகை, ஒட்டியாணம் , விரல்களில் சாற்றிக் கொள்ளும் மோதிரத்திற்கு வந்து, கால் விரல்களில் மெட்டியெல்லாம் சார்த்தி கிரமமாக செய்ய வேண்டும். இவை எல்லாவற்றிற்குமே மந்திரங்கள் உண்டு. இவை எல்லாவற்றையும் கிரமமாகச் செய்து சர்வாபரண பூஷிதையாக அவள் ஆனதிற்குப் பிறகு, புஷ்பமாலை சாற்றி ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாசனத்திற்கு அழைத்துக் கொண்டு போக வேண்டும். அங்குள்ள காமேஸ்வரருடைய பீடத்தில் மடியில் அவளை அமர்த்தி வைத்து, அவளைச் சுற்றி ஆவரண தேவதையெல்லாம் இருக்கும்படிச் செய்ய வேண்டும். காமேஸ்வர, காமேஸ்வரிக்கு தாம்பூலம் சமர்ப்பித்து, காமேஸ்வரிக்கு ஒரு நெய்வேத்தியத்தை கொடுக்க வேண்டும். அப்படி காமேஸ்வர, காமேஸ்வரி சொரூபத்தில் அம்பாள் சந்தோஷமாக இருக்கும்போது நாம் அதற்குப் பிறகு செய்ய வேண்டிய பூஜைகளை செய்ய வேண்டும்.
அதற்குப் பிறகு நாம் சந்தனாதி திரவியங்கள், புஷ்பங்களை சாற்றி விட வேண்டும். த்ரிசதீ மந்திரத்தால்அர்ச்சித்து நிவேதனம் செய்ய வேண்டும். சதுர்வேதங்கள், வாத்தியம், கீதம், சத்ரம், சாமரம், குடை, கண்ணாடி, விசிறியால் உபசாரங்களெல்லாம் செய்ய வேண்டும். இப்படியாக 54 உபசாரங்களை மகான்கள் கொடுத்திருக்கிறார்கள்.
இப்படி 64 உபசாரங்களால் ஸ்ரீ வித்யா உபாசனையால் அவள் ஆராதிக்கப்படுவதால் அம்பாளுக்கு சதுஷ்ஷஷ்டி உபாசாராட்யா என்று பெயர்.
இதற்கு அடுத்து, சதுஷ்ஷஷ்டி கலாமயீ என்று அடுத்த நாமா வருகின்றது. அறுபத்து நான்கு கலையினுடைய வடிவாக இருப்பவள் என்று பார்க்கிறோம். பொதுவாக 64 கலைகளுக்கு… நான்கு வேதங்கள். உப வேதங்கள். 18 வித்யைகள். ரத்ன பரீட்சை என்று பல்வேறு வித்யைகள் சொல்லப்படுகின்றன. இந்தப் பிரபஞ்சத்தில் எப்படியெல்லாம் நம்முடைய அறிவை நாம் விருத்தி செய்து கொள்கிறோமோ அது எல்லாமே அம்பாள்தான். அதற்கு 64 என்பது ஒரு எண் அவ்வளவுதான். ஆனால், வித்யை கலை என்பதெல்லாம் அளவிடற்கரியது. நமக்காக 64 என்று சுருக்கி தந்திருக்கிறார்கள்.
இதற்கு முந்தைய நாமாவான சதுஷ்ஷஷ்டி உபாசாராட்யா என்பது 64 உபசாரங்கள் என்கிற அன்பைச் சொன்னது.
இந்த சதுஷ்ஷஷ்டி கலாமயீ என்பது 64 விதமான வித்யையை அறிவைச் சொல்கிறது. நம்முடைய அறிவு எங்கெல்லாம் விரிவாகுதோ அங்கெல்லாம் அம்பாள் இருக்கிறாள். ஒவ்வொரு கணமும் அறிவு விரிவாவதால் சதுஷ்ஷஷ்டி கலாமயீ. இந்த அறிவானது 64 விதங்களில் விகசித்து நம்மை அடைகின்றது என்று இங்கு பொருள் கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக, மஹா சதுஷ்ஷஷ்டி கோடி யோகிநீ கணஸேவிதா என்பதை பார்ப்போம். இதுவொரு முக்கியமான நாமமாகும். அம்பாளினுடைய பரிவார தேவதைகளுக்கு யோகினிகள் என்று பெயர். இவர்கள் எத்தனை பேர் என்பதெல்லாம் தெரியாது. வித்யைகளுக்கு எப்படி எண்ணிக்கை தெரியாதோ… அதுபோல யோகினிகளுக்கு எண்ணிக்கை தெரியாது. அம்பாளைச் சுற்றி பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, மாகேந்திரி, மகாலட்சுமி என்று சொல்லக் கூடிய எட்டு யோகினிகள் இருக்கிறார்கள். ஸ்ரீ சக்ரத்தினுடைய முதல் ஆவரணத்திலேயே இந்த எட்டு பேர் வந்து விடுவார்கள். அந்த எட்டு யோகினிகளுக்கும் எட்டெட்டு பரிவார தேவதைகள் இருக்கிறார்கள். இப்போது மொத்தம் 64 யோகினிகள் என்று கணக்கு வருகின்றது. இந்த 64 யோகினிகளைத்தான் சதுஷ்ஷஷ்டி யோகினிகள் என்று சொல்கிறோம். இந்த சதுஷ்ஷஷ்டி யோகினிகளுக்கு ஒரிசாவில், புவனேஸ்வரருக்கு அருகேயுள்ள ஹிராபூரில் கோவில் உள்ளது.
இப்போது இந்த 64 யோகினிகளுக்கும் ஒரு கோடி பரிவார தேவதைகள் இருக்கின்றனர். முதலில் அம்பாள். அம்பாளைச் சுற்றி எட்டு பேர். அந்த எட்டு பேருக்கும் எட்டெட்டு யோகினிகள். மொத்தம் 64 பேர். இப்போது இந்த அறுபத்து நான்கு யோகினிகளுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி பேர்கள் பரிவார தேவதைகளாக உள்ளனர். அப்படிப் பார்க்கும்போது 64 கோடி பேர் அம்பாளைச் சுற்றிலும் உள்ளனர். இன்னொரு சம்பிரதாயத்தில் என்ன சொல்கிறார்களெனில், இதுபோன்று ஒவ்வொரு ஆவரணத்திலும் 64 கோடி பேர் உள்ளனர். ஏனெனில் மொத்தம் ஒன்பது ஆவரணங்கள். அது இன்னும் விரிவாகப் போகும். infinite.
இந்த 64 கோடி யோகினிகளால் சேவிக்கப்படுபவள்தான் லலிதா மஹா திரிபுரசுந்தரியாகும். இப்படி அறுபத்து நான்கு கோடி யோகினிகளால் ஆராதிக்கப்படுவள் அம்பிகை என்பதைத்தான் மஹா சதுஷ்ஷஷ்டி கோடி யோகிநீ கணஸேவிதா என்று இந்த நாமம் விளக்குகிறது.
(சுழலும்…)

Related Stories: